Published : 02 Sep 2014 08:08 PM
Last Updated : 02 Sep 2014 08:08 PM

பாஜக-வின்100 நாட்கள் ஆட்சி: வெறும் வார்த்தை ஜாலங்களே - காங்கிரஸ் தாக்கு

பிரதமர் நரேந்திர மோடி ஒரு ‘கனவு வியாபாரி’, அவர் தவறான உறுதிமொழிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்துள்ளார். 100 நாள் ஆட்சி வெறும் வார்த்தை ஜாலம்தான் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சனங்களை வைத்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறும்போது, “நிறைவேறாத கனவுகளை மோடி விற்றுள்ளார். அவர் அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்து உறுதிமொழிகளையும் வழங்கியுள்ளார். ராகுல் காந்தி அப்படிச் செய்பவர் அல்ல, தவறான உறுதி மொழிகளை ராகுல் வழங்க மாட்டார், மேலும் கனவு வியாபாரியாக இருக்க மறுப்பவர். ராகுல் நேர்மையானவர் அதனால் அவர் இவற்றையெல்லாம் செய்ய மாட்டார்” என்று கூறியுள்ளார்.

மேலும் பாஜக கனவுகளை விற்று ஆட்சியைப் பிடித்துள்ளது, 100 நாட்கள் ஆட்சி ஏமாற்றமளிக்கிறது என்று அவர் கூறினார்.

எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை, நிர்வாகத்தில் சமரசமும், நம்பிக்கையின்மை மற்றும் பயத்துடன் கூடிய பணிப் பண்பாட்டை வளர்த்தெடுத்து வருகிறது பாஜக ஆட்சி என்று அவர் தனது உரையில் சாடியுள்ளார்.

அயலுறவுக் கொள்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை, இந்தியாவின் இருதரப்பு, பிராந்திய, மற்றும் சர்வதேசக் கடமைகளை முக்கியமற்றதாக்கி வருகிறது நடப்பு ஆட்சி.

அயலுறவுக் கொள்கைகள் வெறும் வார்த்தை ஜாலங்களையும் நாடகீயத்தையும் தாண்டிய ஒன்று.

கறுப்புப் பண விவகாரத்திலும் இப்படியே, 85 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்றார்கள் 100 நாள் ஆட்சியில் இன்னும் 85 பைசாவைக் கூட கொண்டு வரவில்லை. இது மக்களை மோசடி செய்து தவறான வழிநடத்துதலுக்கு இட்டுச் செல்வது என்று ஆனந்த் சர்மா கடுமையாகத் தாக்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x