Published : 01 Aug 2014 10:00 am

Updated : 01 Aug 2014 09:35 am

 

Published : 01 Aug 2014 10:00 AM
Last Updated : 01 Aug 2014 09:35 AM

தியாகராஜருக்குக் காப்புரிமை உண்டா?

கர்நாடக சங்கீதத்தின் முதுகெலும்பான கீர்த்தனைகள் காப்புரிமையில் கலங்கி நிற்கும் வரலாறு

கலைஞர்களுக்கு இன்றைய டிஜிட்டல் யுகம் ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு இசைக் கலைஞர் தன் படைப்பைச் சந்தைக்குக் கொண்டுசெல்வதற்கு, இசைப் பதிவு நிறுவனம், சந்தை முகவர், இடைத்தரகர்கள் என்றொரு பெரிய பட்டாளமே தேவை என்றிருந்த நிலை இன்று மாறியுள்ளது.


இணையம், கைபேசி இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் ஊடகங்கள் மூலம், கலைஞர்கள் மக்களிடம் நேரடியாகச் சென்று சேர முடியும். ரசிகர்களின் பாராட்டையும் விமர்சனங்களையும் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும். அதேசமயம், சமூக ஊடகங்களில் தங்கள் படைப்புகளைப் பதிவேற்றும் கலைஞர்கள், காப்புரிமை என்ற பெயரில் அபத்தமான ஒரு சங்கடத்தை எதிர்கொள்ள நேர்கிறது.

கீர்த்தனைகள் யாருக்குச் சொந்தம்?

இந்தியாவில், குறிப்பாக கர்நாடக இசையுலகில், தாங்கள் பாடிய, இசைத்த படைப்புகளை யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிடும்போது பல சிக்கல்கள் எழுகின்றன. மிக முக்கியமான பிரச்சினை: காப்புரிமை. பாரம்பரிய இசையான கர்நாடக இசையின் முதுகெலும்பாகக் கீர்த்தனைகள் அமைந்துள்ளன. கலைஞர்கள் அவற்றை, அவர்தம் படைப்பாற்றலும் இணைத்துப் பாடுவது வழக்கம்.

ஒருவரின் படைப்பு அவரது ஆயுளுக்குப் பின் 60 ஆண்டுகள் வரைதான் காப்புரிமைக்கு உட்படுத்தப்பட முடியும் என்கிறது சட்டம். அதேசமயம், கை மேல் கிடைத்த பொன்னையும் மணியையும் உதறித் தள்ளி, ‘நிதி சால சுகமா’ பாடி, இசையில் திளைத்த தியாகராஜரின் கீர்த்தனைகளுக்கும் காப்புரிமை கொண்டாடுகின்றன சில நிறுவனங்கள்.

ஒரு பாடலை ஏதேனும் ஒரு நிறுவனம் குறுந்தகடாக வெளியிட்டிருக்கும்போது, குறிப்பிட்ட அந்தப் பதிவுக்கு மட்டும்தான் அந்த நிறுவனம் உரிமை கொண்டாட முடியுமே தவிர, அந்தப் பாடலுக்கு அல்ல. ஆனால், பதிவேற்ற முகவரி (கன்டென்ட் ஐடி: ஒருவர் யூடியூபில் பதிவேற்றும் படைப்பு நகல் எடுக்கப்பட்டோ அல்லது அதன் சாயலிலோ மற்றொருவரால் பதிவேற்றப்பட்டால், அந்த நகல் வீடியோவைக் கட்டுப்படுத்தத் தரப்படும் உரிமை) தொடர்பான தகவல்களை, யூடியூப் போன்ற தளங்களுக்கு அளிக்கும் பெரிய இசைப் பதிவு நிறுவனங்கள், அந்தப் பாடல்களுக்கான உரிமை தங்களுக்குத்தான் என்பது போன்ற மாயையை உருவாக்கிவிடுகின்றன.

இதனால், ஒரு கலைஞர் தனது படைப்பைப் பதிவேற்றம் செய்யும்போது, குறிப்பிட்ட இசை நிறுவனத்துக்கு உரிமையான பாடலை வலையேற்றிவிட்டதாக அவரை யூடியூப் எச்சரிக்கை செய்கிறது. இதற்கு விளக்கமளித்து அவர் தரும் தகவல்கள், இசைப் பதிவு நிறுவனத்தின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது.

இதுபோன்ற தருணங்களில், உண்மையில் அந்தப் பாடலுக்கு எந்த வகையிலும் உரிமை கொண்டாட முடியாத நிறுவனங்கள் நினைத்தால், சம்பந்தப்பட்ட கலைஞரின் படைப்பை முடக்க முடியும் என்ற நிலை உள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.

நகலெடுக்கும் வேலையல்ல

ஒரு நிறுவனம் வெளியிட்டிருக்கும் இசைப் பதிவிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை உருவி உபயோகித்துக்கொண்டால், அது காப்புரிமையை மீறும் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், யார் வேண்டுமானாலும் பாடலாம் என்று பொதுச் சொத்தாக இருக்கும் கீர்த்தனைகளுக்குச் சில நிறுவனங்கள் உரிமை கொண்டாடுவதுதான் வேதனை.

பல நிறுவனங்களில் ‘சங்கீதத்துக்கு ஸ்நானப் பிராப்தி இல்லாத மஹானுபாவர்களே’ காப்புரிமையைக் கண்காணிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் பார்வைக்கு ஒரு கலைஞரின் நியாயமான எதிர்ப்பு கொண்டுசெல்லப்பட்டாலும், அதன் தாத்பரியத்தை உணராத அவர்கள், அவற்றை உதாசீனம் செய்யவும் தயங்குவதில்லை. படைப்பு முகவரி தொடர்பான தகவல்களை யூடியூப் தளத்தில் பதிந்துவிட்டாலே, குறிப்பிட்ட படைப்புகள் தங்களுக்குச் சொந்தமானவை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

இதுபோன்ற தருணங்களில், இவர்களது வாதம் பொய் என்று நிரூபிக்க நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலான கலைஞர்களுக்கு இவற்றுக்கெல்லாம் நேரமும் சக்தியும் இருக்காது என்பதை நன்கு உணர்ந்தே, அந்த நிறுவனங்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றன.

ஒரு கலைஞரின் யூடியூப் கணக்கில் மூன்று முறை இதுபோன்ற சிக்கல்கள் எழுந்தால், அதன் பின்னர் அவரது கணக்கே முடக்கப்பட்டுவிடும். பல ஆண்டுகள் உழைப்பில், பல மணி நேர இசைப் பதிவுகளைப் பதிவேற்றிய கலைஞர்களின் யூடியூப் ஊடகங்கள், இணைய வெளியில் கணப்பொழுதில் காணாமல் போய்விடும்.

சோர்வுதரும் சோதனை

கடந்த ஒரு ஆண்டாக, ‘பரிவாதினி’ என்கிற யூடியூப் ஊடகத்தை நடத்துபவன் என்ற வகையில், இது போன்ற காப்புரிமை தொடர்பான அறிக்கைகளை, எச்சரிக்கைகளை நாள்தோறும் சந்திக்க நேரிடுகிறது. ஆண்டுதோறும் திருவையாறில் கலைஞர்கள் இணைந்து பாடும் தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள்கூடத் தங்களுக்குச் சொந்தம் என்று சில நிறுவனங்கள் கூறுகின்றன. ‘ரகுபதி ராகவ ராஜாராம்', ‘ஜன கண மன' போன்ற பாடல்களின் காப்புரிமை தங்களுக்கு இருப்பதாகச் சில நிறுவனங்கள் கூறுவது இன்னும் கொடுமை.

சில நாட்களுக்கு முன் உலக இசை தின விழாவில் கலந்துகொண்ட முன்னணி இசைக் கலைஞர்கள் பலர் ஒன்றாகப் பாடினர். அவர்கள் பாடிய ‘மைத்ரீம் பஜத’ என்ற பாடலுக்கும் இது போன்ற நெருக்கடி ஏற்பட்டது, இணையத்தில் கலைஞர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இணையத்தில் இதை எதிர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் மனுவில் இதுவரை பல முன்னணிக் கலைஞர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இன்றைய சூழலில் சங்கீதத் துறையை அறிவியல்பூர்வமாக முன்னெடுக்கும் முனைப்புடன் யூடியூப் போன்ற தளங்களில் செயல்படுபவர்கள் பெரும் சோர்வுக்குள்ளாகிறார்கள். இசைக் கலைஞர்களும் ரசிகர்களும் செய்தி ஊடகங்களும் இணைந்து ஒருமித்த குரலாய் (தேவைப்பட்டால் நீதிமன்றத்துக்கும் சென்று) குரல்கொடுத்தால்தான், இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். உயிரோட்டமான இசையைத் தரும் கலைஞர்கள், காப்புரிமை என்ற பெயரில் எதிர்கொள்ளும் சங்கடம் களையப்பட வேண்டும்.

- லலிதா ராம், எழுத்தாளர்.( துருவ நட்சத்திரம், இசையுலக இளவரசர் நூல்களின் ஆசிரியர்)
தொடர்புக்கு: ramchi@gmail.com​

கர்நாடக சங்கீதம்கீர்த்தனைகள்காப்புரிமைஇசை கலைஞர்கள்டிஜிட்டல் யுகம்இசைப் பதிவுதியாகராஜர்தியாகராஜ கீர்த்தனைகள்யூடியூப்

You May Like

More From This Category

More From this Author