Last Updated : 06 Aug, 2014 12:00 AM

 

Published : 06 Aug 2014 12:00 AM
Last Updated : 06 Aug 2014 12:00 AM

பிரமிடுகள் பலவிதம்

பிரமிடு என்று சொன்னால் உங்களுக்கு எது ஞாபகத்துக்கு வரும்? எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுதானே? பட்டை கூம்பு வடிவிலான இந்தப் பிரமிடு பழைய உலக அதிசயங்களுல் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததுதான். ஆனால், எகிப்தில் மட்டுமல்ல, சூடான், நைஜீரியா, கிரீஸ், இந்தோனோசியா, மெக்சிகோ உள்ளிட்ட இன்னும் சில நாடுகளிலும்கூட பிரமிடுகள் உள்ளன.

எகிப்து : இங்கு தற்போது வரை சுமார் 135 பிரமிடுகள் கண்டறியப்பட்டுள்ளன. பெரும்பாலான பிரமிடுகள் தலைநகர் கெய்ரோவுக்கு அருகே உள்ளன. குட்டி பிரமிடுகள் முதல் பிரம்மாண்டமான பிரமிடுகள் வரை இதில் அடக்கம். இவற்றில் கிசாவில் உள்ள பிரமிடுகளே உலக அதிசயத்தில் இடம்பெற்றுள்ளன. பேரரசர்கள், அவரது குடும்பத்தினரை அடக்கம் செய்ய இந்தப் பிரமிடுகள் கட்டப்பட்டன.

சூடான்: எகிப்தைவிட அதிக பிரமிடுகள் சூடானில் உள்ளன. இங்கு 220 பிரமிடுகள் இருக்கின்றன. நுபியர்கள் காலத்தில் இங்கே குட்டிக் குட்டி பிரமிடுகள் கட்டப்பட்டன. எகிப்து பிரமிடுகள் போல் அல்லாமல், செங்குத்தாகவே இவை அமைக்கப்பட்டன. இவை எல்லாம் கல்லறைகளே.



நைஜீரியா: தலைநகர் அபுஜாவில் குபோ நாகரிகத்தின்போது, சுடே பிரமிடுகள் கட்டப்பட்டன. இங்கு 10 பிரமிடுகள் உள்ளன. இவையெல்லாமே களிமண்ணால் ஆனவை. இவை எல்லாமே 3 அடி உயர குட்டி பிரமிடுகள்தான். இந்தப் பிரமிடுகள் கடவுளுக்காகக் கட்டப்பட்டவை.

கிரீஸ்: பண்டைய கிரீஸில் ஹெலனிக்கோன் என்ற நகருக்கு அருகே 2 பிரமிடுகள் கட்டப்பட்டன. இவை கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அர்கோஸ் ஆட்சிக்காகப் போராடிய வீரர்களின் நினைவாக இந்தப் பிரமிடுகள் கட்டப்பட்டன.

இந்தோனேசியா: இங்குப் போரோபுதூரில் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமயப் பிரமிடு ஒன்று உள்ளது. இதில் இந்தியக் கட்டிடக் கலையின் தாக்கமும் உள்ளது. மூதாதையர் களின் ஆவிகள் வாழ்வதாக வைக்கப்பட்ட நம்பிக்கைக்காக இந்த பிரமிடு கட்டப்பட்டது.

மெக்சிகோ: சிச்சென் இட்சா என்ற இடத்தில் எல் காஸ்ட்டிலோ என்ற பிரமிடு உள்ளது. உண்மையில் இது படிக்கட்டுகளால் ஆன பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு கோட்டை. மாயன் கலாசாரத்தைச் சேர்ந்த மக்கள் இதை கட்டினர்.

இவை தவிர இந்தியாவில் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில் கோபுரங்கள் பிரமிடுகள் பாணியிலேயே கட்டப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x