

மிதிவண்டி ஓட்ட, நீந்த என்ன செய்ய வேண்டும்? ஆர்வத்தோடு அடிப்படைகளை அறிந்து, நேரத்தைச் செலவிட்டு பயிற்சிசெய்ய வேண்டும் அவ்வளவுதான். ஆனால், பள்ளியில் பயிலக் குழந்தைகள் நன்றாக உழைக்க வேண்டும் எனச் சொல்வது ஏன்? - ராபின் ஆர். ஜாக்சன்.
பள்ளியில் அதிகம் உழைப்பது யார்? மாணவரா, ஆசிரியரா அல்லது ஏனைய பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டவரா? வேலைக்குப் போகும் பெற்றோரைவிடப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அதிக மாக வேலை செய்ய வேண்டியிருப்பதாகத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பேசப்பட்டது.
“பெரிய வங்களுக்கு அலுவலகத்தில் மட்டும்தான் வேலை, எங்களுக்கு வீட்டுப்பாடமும் தராங்களே” என்று சிறாரும் சுடசுட விவாதத்தில் இறங்கினர். இதையொட்டி, ‘Never work harder than your students’ புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
பாடப்பொருளின் பரிணாமம்: வகுப்பறையில் எப்போது உழைப்பு தேவைப்படாது, அதற்கு ஆசிரியர் என்ன செய்ய வேண்டும் என்பதை நூலாசிரியர் ராபின் ஜாக்சன் விரிவாக எடுத்துரைக்கிறார். மாணவர்கள் பற்றிய இரண்டு விதமான புரிதல் ஆசிரியருக்குத் தேவை என்கிறார்.
ஒன்று, திறனறி மதிப்பீடு (Diagnostic Assessment), மற்றொன்று வகைப்படுத்தப்பட்ட கற்றல் (Differentiated Instruction). இவர் முன்வைக்கும் வழிமுறை களில் முதலாவது மாணவர்கள் கற்றலில் அடைந்திருக்கும் இடத்தை உணர்தல்.
அப்படி என்றால்? கற்றல் என்பது பாடப்பொருளின் பரிணாம வளர்ச்சி. உதாரணமாக, 10ஆம் வகுப்பில் அல்ஜீப்ரா சார்ந்த சமன்பாடுகளைக் கற்றுக்கொடுக்கும் போது ஆசிரியர்கள் சிலவற்றை உணர வேண்டும். அது 4ஆம் வகுப்பில், அறியாத எண்ணைக் கண்டுபிடித்தல் என்கிற ஒன்றில் தொடங்கியது.
உரைகள், விதிகள், பொதுவான பிரதிநிதித்துவம் என 5ஆம், 6ஆம் வகுப்பில் விரிவடைந்தது. 7ஆம் வகுப்பில் எக்ஸ் (X) அறிமுகமானது. 8ஆம் வகுப்பில் (a+b) 2 எனப் பரிணாம வளர்ச்சி அடைந்து 9ஆம் வகுப்பில் அல்ஜீப்ரா சமன்பாடுகள் என விரிவடைந்தது. 10ஆம் வகுப்பில் காரணிப்படுத்துவது, தீர்ப்பது என்பதாக அது பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை அடைந் துள்ளது.
ஒரு மாணவர் 7ஆம் வகுப்பு பாடத்தை அல்லது 8ஆம் வகுப்பு பாடத்தை ஏதோ ஒரு காரணத்தால் கற்கத் தவறி இருக்கலாம். அது அவருடைய தவறு அல்ல. இழக்கிறோம் என்பதே அவருக்கு அப்போது புரியாது.
9ஆம் வகுப்பில் நேரடியாக அல்ஜீப்ரா சமன் பாடுகளைப் பார்க்கும்போது அவருக்கு ஒன்றும் புரிய வில்லை. புரிதல் இன்றி மனப்பாடம் செய்து, எப்படியோ தேர்வு எழுதி இப்போது 10ஆம் வகுப்புக்கும் வந்துவிட்டார். அல்ஜீப்ரா சமன்பாடுகளை காரணிப்படுத்துவது, தீர்ப்பது என்று திணிக்கும்போது கற்றலில் பின்தங்குகிறார்.
கண்டுபிடிக்கப்பட வேண்டிய மாணவர்: எப்படியாவது படிக்க வேண்டும் என்கிற அழுத்தத்தில் இப்போது அவருக்குத் தேவை உழைப்பு. அப்படித்தான் உழைப்பு கல்விக்குள் நுழைகிறது. இப்போது பள்ளியிலேயே அதிகம் உழைப்பவர் இந்த பரிதாபத்துக்குரிய மாணவர்தான் என்பது இந்த நூலாசிரியரின் வாதம். இனிமையாக, இயல்பாக இருக்க வேண்டிய கல்வி கசக்கிறது.
சொர்க்கமாகத் தெரிய வேண்டிய பள்ளி எரிச்சலூட்டு கிறது. விடுமுறை விட்டால் இனிக்கிறது. இந்த மாணவரை ஆசிரியர் கண்டறிய வேண்டும். வகுப்பறையில் மாணவர்களின் நிலை என்ன? 4ஆம் வகுப்பில் தவறவிட்டவர்கள், 7ஆம் வகுப்பில் தவறவிட்டவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து, அவரவருக்கு விட்ட இடத்தில் இருந்து கற்றலை தொடரவைப்பதற்கு ஏழு உத்திகளை நூலாசிரியர் கற்றுத்தருகிறார்.
இந்தப் புத்தகத்தின் வழியாக சோவியத் கல்வியாளர் லேவ் வயகாட்ஸ்கி, இத்தாலியின் இடதுசாரி கல்வியாளர் ராபர்ட் மார்செனோ, கறுப்பின மக்களின் கல்விப் போராளி ஸ்டீபன் புரூக்ஃபீல்ட் போன்றவர்களின் கற்றல் கோட்பாட்டைப் பின்தங்கிய மாணவர்களின் வளர்ச்சிக் கோட்பாடாக நூலாசிரியர் முன்மொழியும் விதம் சிலிர்ப்பூட்டுகிறது.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com