

உலகின் முதல் மொழி தமிழ், உலகின் முதல் மனிதன் தமிழன் என்று கூறியவர். தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் என்றவர். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் 1902 பிப்ரவரி 7-ம் தேதி பிறந்தார் தேவநேயப் பாவாணர்.
1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1925-ல் தனது முதல் நூலான ‘சிறுவர் பாடல் திரட்டு’ வெளியிட்டார். இவரது படைப்புகளில், ‘இசைக் கலம்பகம்’, ‘இயற்றமிழ் இலக்கணம்’ முக்கியமானவை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் பேராசிரியராக பணியாற்றினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய அயல்நாட்டு மொழிகளின் இலக்கணங்களைக் கற்றறிந்தார். ‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் தந்தை’ என்று போற்றப்படுகிறார். 1974-ல் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.