

ஹரியாணா மாநிலம் கர்னால் நகரில் கல்பனா சாவ்லா பிறந்தார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமானப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். கொலராடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலை பட்டம் பெற்றார். விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் 1995-ல் பயிற்சி முடிந்து விண்வெளி வீராங்கனையானார். 1997-ல் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்டிஎஸ்-87-ல் பயணம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து விண்ணுக்குச் செலுத்தப்பட் டது.
விண்வெளியில் 16 நாட்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது இந்த விண்கலம். அதைத் தொடர்ந்து கொலம்பியா விண்கலம் எஸ்டிஎஸ்-107 விண்வெளிப் பயணம் 2003 பிப்ரவரி 1-ம் தேதி தரையிறங்குவதற்கு சுமார் 15 நிமிடங்கள் இருந்தபோது டெக்சாஸ் வான்பரப்பில் விண்கலம் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லா 41 வயதில் காலமானார். 2011-ம் ஆண்டு முதல் வீரதீர சாகசங்கள் புரியும் பெண்களுக்கு இந்திய அரசு கல்பனாசாவ்லா விருது வழங்கி வருகிறது.