

எழுத்தாளர், தத்துவவாதி, உளவியல் அறிஞர் கென்வில்பர். இவர் அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் 1949 ஜனவரி 31-ம் தேதி பிறந்தார். பள்ளி படிப்பை முடித்ததும், மருத்துவம் படிக்க டியூக் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
முதல் ஆண்டிலேயே அதில் ஆர்வம் குறைந்ததால், உயிரி வேதியியல் படிப்புக்கு மாறினார். முனைவர் பட்ட ஆய்வில் இருந்து பாதியில் விலகி, உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையை 10 ஆண்டுகள் செய்தார். இதில் கிடைத்த வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கை புத்தகங்கள் வாங்க செலவிட்டார்.
ஏராளமான தத்துவம், உளவியல் நூல்களை படித்தார். தாவோ-தே-சிங் உள்ளிட்ட கிழக்கத்திய தத்துவங்கள் இவரை பெரிதும் ஈர்த்தன. உணவகத்தில் வேலை செய்து கொண்டே அடுத்தடுத்து புத்தகங்கள் எழுதினார். ஆன்மிகம், அறிவியலில் 22 புத்தகங்கள் எழுதியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரது புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
‘உளவியல் மாற்றம் குறித்த ஆராய்ச்சிகளின் ஐன்ஸ்டீன்’ என்று அழைக்கப்படுகிறார். தனது ‘தி ஸ்பெக்ட்ரம் ஆஃப் கான்ஷியஸ்னஸ்’ புத்தகம் மூலம் கிழக்கு - மேற்கத்திய தத்துவத்தை ஒன்றிணைக்க விரும்பும் சிந்தனையாளராக உலக புகழ்பெற்றார். சிக்மண்ட் பிராய்டு, கெப்ஸர், புத்தர், ஹெபர்மாஸ் மற்றும் ரமணரின் தத்துவங்களை விளக்கி பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.