

தமிழ் இலக்கியத்தின் முன்னோடி பி.ஆர்.ராஜமய்யர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் 1872 ஜனவரி 25-ம் தேதி பிறந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். தமிழில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
அதனால் 14-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கச்சிக்கலம்பகப் பாடல்களுக்கு விளக்கவுரை எழுதினார்.‘விவேக சிந்தாமணி’ மாத இதழில் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் நாவலைத் தொடராக 3 ஆண்டுகள் எழுதினார்.
சமூகம், மகளிர் நலன், நகைச்சுவை, ஆன்மிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நாவல் 1896-ல்நூல் வடிவம் பெற்றது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அங்கீகாரம் பெற்று, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சென்னைக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தரின் அறிமுகம் கிடைத்தது. அவரது ஆசியுடன் தொடங்கப்பட்ட ‘பிரபுத்தபாரதா’ என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவர் எழுதிய கட்டுரைகள் பின்னாளில் தொகுக்கப்பட்டு ‘வேதாந்த சஞ்சாரம்’ என்ற நூலாக வெளிவந்தது.