

துடிப்பான இளமை காலத்தில்தான் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும், நரை எய்த பின்பு அல்ல என்று இளைஞர்கள் மீது நம்பிக்கை கொண்டவர் விவேகானந்தர்.
இந்திய பண்பாட்டை உலகுக்கு எடுத்துகாட்டியவர், ஆன்மயோகி, ராமகிருஷ்ணரின் தலைமை சீடரான விவேகானந்தர் 1863 ஜனவரி 12-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நரேந்திரநாத். இளம் வயதில் பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், அன்பு மற்றும் மரியாதை போன்ற நற்குணங்கள் படைத்த இளைஞர்களால் மட்டுமே நாடு முன்னேறும் என்று நம்பிக்கையை உலகெங்கிலும் விதைத்தார்.
இவரது பிறந்தநாளை தேசிய இளைஞர் நாளாக இந்திய அரசு 1984-ல் அறிவித்தது. அமெரிக்காவில் நடந்த சிகாகோ மாநாட்டில் சகோதர சகோதரிகளே என்று அவர் தொடங்கிய உரை இன்றளவும் பேசு பொருளாக உள்ளது. நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன் என்று கூறிய விவேகானந்தரிடமிருந்து ஆன்மிகத்தை கடந்து உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத்திறன் மேம்பாடு என இளைஞர்கள் அறிய பல அரிய கருத்துகள் உண்டு.