

இந்திய வரலாற்றாசிரியர்களில் தடம் பதித்தவர் ரொமிலா தாபர். இவரது முதன்மையான ஆய்வு பண்டைய இந்திய வரலாறு. 1931 நவம்பர் 30-ம் தேதி லக்னோவில் பிறந்தார். 1958-ல் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாய்வாளர் ஏ.எல்.பாஷ்யம் தலைமையின் கீழ் லண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
குருஷேத்ரா பல்கலையிலும், டெல்லி பல்கலையிலும், ஜவஹர்லால் நேரு பல்கலையிலும் பண்டைய இந்திய வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் எழுதிய, ‘அசோகரும் மவுரியரின் வீழ்ச்சியும்’ புத்தகம் சர்வதேச புகழ்பெற்றது. 1999-ல் பிரிட்டிஷ் அகாடமியின் இணை உறுப்பினராகவும், 2019-ல் அமெரிக்கத் தத்துவ சங்கத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன.