

வெள்ளம், புயல், சுனாமி, நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை உலக நாடுகள் அவ்வப்போது எதிர்கொண்டு வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை 2004-ல் ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்திலிருந்தும், 2015-ல் பெய்த கன மழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தும் இன்று வரை ஆயிரக்கணக்கானோர் விடுபடவில்லை. இத்தகைய பேரிடர்களினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் 1989-ம் ஆண்டு முதல் அக்.13-ம் தேதி சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு நாளாக ஐ.நா. சபையால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பேரிடர்களின் தன்மையை அறிந்து அதன் அபாயத்தை எவ்வாறு குறைப்பது, பேரிடர் காலத்தில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பன குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இது குறித்த ஆராய்ச்சியில் ஐ.நா. நிபுணர்கள், பயிற்சியாளர்கள், ஈடுபடுகின்றனர்.