

தமிழ்நாட்டின் பழம்பெரும் பெண் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி. 1901 டிசம்பர் 1-ம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார். எழுத்தாளர், மேடை பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாளர் என்ற பன்முகத் திறமைகளுடன் விளங்கினார். இவரது மற்றொரு சிறப்பு துப்பறியும் நாவல் எழுதிய முதல் தமிழ் பெண் எழுத்தாளர் என்பதுதான்.
இவர் சில நாடகங்கள் எழுதியுள்ளார். இவரது முதல் நாடகம், ‘இந்திர மோகனா’. அருணோதயம், தயாநிதி போன்ற நாடகங்கள் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளன.
இவரது கதைகள் ‘மனோரஞ்சனி’ எனும் இதழில் வெளியாகி வந்தன. பின்னர் ‘ஜகன்மோகினி’ எனும் மாத இதழை நடத்தினார். இதன்மூலம் வாசகர்கள் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கிய கோதைநாயகி, 1960 பிப்ரவரி 20-ல் காலமானார்.