ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்: அகிலன் நினைவு தினம் இன்று

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்: அகிலன் நினைவு தினம் இன்று
Updated on
1 min read

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினம் இன்று (ஜன. 31) அனுசரிக்கப்படுகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்தவர் அகிலன் என்று அழைக்கப்படும் பி.வி.அகிலாண்டம். இவர் 1922 ஜூன் 27-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்த பிறகு, அம்மா கடினமான சூழலில் இவரைப் படிக்க வைத்தார். பள்ளிப் பருவத்தில் ‘சக்தி வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.

1938-ல் பள்ளியின் காலாண்டு சஞ்சிகைக்காக 'அவன் ஏழை' என்ற கதையை முதன்முதலாக எழுதினார். கதை நடையைப் பார்த்து சந்தேகம் அடைந்த தமிழ் ஆசிரியர், 'எங்கு திருடினாய்?' என்றார். இவர் கோபத்துடன், 'என் கதையை திருப்பிக் கொடுத்துடுங்க. பிரசுரிக்க வேண்டாம்' என்றார். உண்மையை அறிந்த ஆசிரியர், அவரைத் தட்டிக்கொடுத்தாராம்.

நாவல், சிறுகதை, கட்டுரை, பயணக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், சிறார் இலக்கியம் என பல்வேறு தளங்களில் அகிலன் எழுதியுள்ளார். இவரது 'வேங்கையின் மைந்தன்' நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

இந்திய மொழிகள் மட்டுமின்றி, உலகின் பல மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் என பல வடிவங்களில் உலகின் பல பகுதிகளிலும் இவரது படைப்புகள் வலம் வருகின்றன. இவரது 'பாவை விளக்கு' நாவல் அதே பெயரிலும், 'கயல்விழி' நாவல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்ற பெயரிலும் திரைப்படங்களாக வந்தன.

1975-ல் 'சித்திரப் பாவை' என்ற நாவலுக்கு ஞானபீட விருது பெற்றார். ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் என்பது குறிப்பிடத்தக்கது. பின் 1988 ஆம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி, தனது 66-வது வயதில் அகிலன் காலமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in