

பிரான்சு நாட்டின் பிரபல ஓவியர் எடுவார்ட் மனே. இவர் 1832 ஜனவரி 23-ம் தேதி பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தார். 1841-ல் காலேஸ் ரோலின் நடுநிலைப்பள்ளியில் படித்தார். 1848-ல் கடற்படையில் சேருவதற்கான தேர்வு எழுதினார். ஆனால் இரண்டு முறை தோல்வியுற்றார். பின்னர், 1850-ல் தாமஸ் கூதுய்ர் என்ற ஓவிய ஆசிரியரிடம் ஓவியம் கற்றார். 1853 முதல் 1856 வரை ஜெர்மனி, டச்சு, ஸ்பானிஷ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டின் பிரபல ஓவியர்களை சந்தித்து, அவர்களின் ஓவியங்களை கூர்ந்து கவனித்து அதன் நுணுக்கங்களை கற்றறிந்தார். 1856-ல் சொந்தமாக ஓவிய கூடத்தை தொடங்கினார். உணவுவிடுதியில் மக்கள், யாசகர்கள், பாடகர்கள், நாடோடிகள், காளைமாட்டு சண்டை ஓவியங்களை தொடக்ககாலத்தில் வரைந்தார். அதன்பிறகு, விருந்தை மக்கள் உற்சாகமாக கொண்டாடுவது, ஓட்டப்பந்தயத்தில் சீறி ஓடும் குதிரை, நன்றாக உடையணிந்த பெண்ணின் பின்னே உள்ள பனி தரையில் குழந்தைகள் சறுக்கி விளையாடுவது என மக்களின் நவீன வாழ்க்கையை ஓவியமாக்கியதால் இவரது ஓவியங்கள் மக்களிடையே பிரபலமானது.