இன்று என்ன? - வங்காளத்தின் முடிசூடா மன்னன்

இன்று என்ன? - வங்காளத்தின் முடிசூடா மன்னன்
Updated on
1 min read

இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி. இவர் 1848 நவம்பர் 10-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். பேரன்ட்டல் அகாடமிக் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்து கல்லூரியில் பயின்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தார்.

இங்கிலாந்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். வயதைக் காரணம் காட்டி, தேர்ச்சி ரத்து செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். கொல்கத்தா திரும்பியதும் மெட்ரோபாலிட்டன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆனந்தமோகன் போஸுடன் இணைந்து இந்திய தேசிய அமைப்பை 1876-ல் தொடங்கினார். ஆங்கில அரசின் இன வேறுபாட்டை எதிர்த்து நாடு முழுவதும் போர்க் குரல் எழுப்பினார்.

‘பெங்காலி’ என்ற ஆங்கில நாளிதழை 1878-ல்தொடங்கினார். இதில் ஆங்கில அரசுக்கு எதிராக எழுதியதால் கைது செய்யப்பட்டார். வளர்ந்துவந்த தலைவர்களான கோபால கிருஷ்ண கோகலே, சரோஜினி நாயுடு போன்றவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். காங்கிரஸ் தலைவராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் வல்லவர். சரளமான, ஆழமான சொல்லாற்றல் இவரை சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக பிரகாசிக்க வைத்தது. ‘வங்காளத்தின் முடிசூடா மன்னன்’ என்று புகழப்பட்டார் சுரேந்திரநாத் பானர்ஜி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in