Published : 15 Sep 2023 04:00 AM
Last Updated : 15 Sep 2023 04:00 AM

இன்று என்ன? - ஆசியாவின் மிகப்பெரிய அணையை உருவாக்கியவர்

இந்தியாவின் சிறந்த பொறியாளர், கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி எம். விஸ்வேஸ்வரய்யா. இவர் 1860 செப்டம்பர் 15-ம் தேதி கர்நாடகா கோலார் மாவட்டத்தின் முட்டனஹள்ளியில் பிறந்தார். 1881-ல் இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

‘இந்திய பாசன ஆணையத்தில்’ பணியை தொடங்கினார். தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து, 1903-ல்புனேவிலுள்ள ‘கடக்வசல’ நீர்த்தேக்கத்தில் அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டார். வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க வெள்ளதடுப்புமுறை அமைப்பையும், துறைமுகங்களை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் தடுப்பு அமைப்பையும் வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்தேக்க அணைகளில் ஒன்றாக கருதப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணையை காவிரியின் குறுக்கே உருவாக்கி பெரும் புகழ்பெற்றார். இது மட்டுமல்லாமல், திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலையமைக்கவும், மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் நீர் மின் உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார். 1934-ல் ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற நூலை எழுதினார். 1955-ல் இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x