

அமெரிக்க கல்வியாளர், புகழ்பெற்ற வானியல் ஆசிரியர் மேரி எம்மா பிர்ட். மிச்சிகனில் உள்ள லீ ராயில் 1849-ல் பிறந்தார். 19-ம் நூற்றாண்டில் பெண் கல்வி கற்பது மிகவும் கடினமாக இருந்தது. மேரி பிர்ட் கல்வி கற்கும் போதே ஆசிரியராகவும் பணிபுரிய நேர்ந்தது. இவர் லீவன்வர்த் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
இவர் 1871 முதல் 1874 வரை ஓபெர்லின் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின்னர், முதல் பெண் ஆய்வக உதவியாளராக 1883-ம்ஆண்டு கார்லேடன் கல்லூரியில் உள்ள காட்செல் ஆய்வகத்தில் பணியை தொடங்கினார். 1887-ல் ஸ்மித் கல்லூரி ஆய்வகத்தின் இயக்குநராகவும், வானியல் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.
அமெரிக்க வானியல் கழகம், பசிபிக் வானியல் கழகம், பிரித்தானிய வானியல் கழகங்களில் உறுப்பினர் பதவி வகித்தார். 1904-ல் கார்லெட்டான் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். மக்கள் வானியல் இதழில் பல வானியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்ட இவர் 1934 ஜூலை 13 காலமானார்.