

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி இந்திரா பார்த்தசாரதி, 1930 ஜூலை 10-ம் தேதி சென்னையில் பிறந்தார். ஒன்பது வயதில் பள்ளியில் நேரடியாக 6-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 15 வயதிலேயே சிறுகதை எழுத தொடங்கினார்.
பிராமண சமூகத்தில் கணவனை இழந்த இளம் பெண்கள் படும் துயரங்கள் பற்றியது 'மனித எந்திரம்' எனும் இவரது முதல் சிறுகதை. திருச்சி நேஷனல் கல்லூரியில், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராக பணிபுரிந்தார். ஓய்வுக்குப் பிறகு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராக பணியாற்றினார். போலந்தின் வார்ஸா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவம் மற்றும் பண்பாட்டு ஆசிரியராக பணியாற்றினார்.
இவரின் முதல் நாவல் ‘காலவெள்ளம்' 1968-ல்வெளியானது. ‘குருதிப்புனல்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 1983-ல் 'கண் சிவந்தால் மண்சிவக்கும்' என்ற பெயரில் இந்நாவல் திரைப்படமாகப்பட்டது. 1990-ல் ’உச்சிவெயில்’ குறுநாவல் ’மறுபக்கம்’ திரைப்படமாக வெளிவந்தது. பத்ம விருதால் 2010-ல் கவுரவிக்கப்பட்டார்.