

நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் கணிதவியலாளர், இயற்பியலாளர் மரியா கோப்பெர்ட் மெயர். இவர் 1906 ஜூன் 28-ம் தேதி ஜெர்மனியின் கட்டோ விஸ் நகரில் (தற்போதைய போலந்து) பிறந்தார். சிறுவயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கிய மரியாவுக்கு இயற்பியல் மீது ஆர்வம் இருந்ததால் அதில் ஆய்வு மேற்கொண்டார்.
‘ஃபோட்டான்களின் உள்ளீர்ப்பு’ கோட்பாடுகளை வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றார். ஃபோட்டான்களின் குறுக்குப் பரப்பின் அலகு, ஜி.எம். அலகு என்று இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அணு ஆயுதங்கள் செய்வதற்கான ரகசிய ஆய்வில் முக்கியப் பங்கு வகித்தார். கணவருடன் இணைந்து இயந்திரவியல் பாடநூலை எழுதினார்.
சிகாகோ பல்கலைக்கழகத் தில் அணுக்கரு பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றினார். அர்கோன் தேசிய ஆய்வுக்கூடத்தில் பகுதிநேர ஆய்வாளராகவும் பணிபுரிந்தார். விண்வெளியில் சிறுவெடிப்பு பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டபோது, அணுக்கரு கூடு அமைப்பின் மாதிரியை உருவாக்கினார். இதற்காக 1963-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.