

விடுதலைப் போராட்ட வீரர், சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர் மா.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பத்தில் 1906 ஜூன் 26-ம் தேதி பிறந்தவர் ம.பொ.சிவஞானம். ஏழை குடும்பம் என்பதால் 3-ம் வகுப்போடு பள்ளி கல்வியை முடித்து கொண்டார். நெசவுத் தொழிலும், அச்சு கோர்க்கும் பணியையும் வெகு காலம் செய்தார்.
காங்கிரஸில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். சொந்த முயற்சியால் படித்து தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டார். ‘வள்ளலாரும் பாரதியும்’, ‘எங்கள் கவி பாரதி’ என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். ‘எனது போராட்டம்’ என்ற சுயசரிதையை எழுதினார்.
சிறையில் இருந்தபோது சிலப்பதிகாரம் கற்றார். சிலப்பதிகாரத்தில் இவரது புலமையைப் பாராட்டி தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு ‘சிலம்புச் செல்வர்’ என்ற பட்டத்தை சூட்டினார்.
‘தமிழன் குரல்’ என்ற இதழை நடத்தினார். இவர் எழுதிய ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. 2006-ல் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கியது.