

ஆராய்ச்சியாளர், பேராசிரியர் அதா யோனத் இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் 1939 ஜூன் 22-ம் தேதி பிறந்தார். 4 அறைகள் கொண்ட வாடகை வீட்டில் மேலும் 2 குடும்பத்துடன் வீட்டை பகிர்ந்து கொண்டு இவர்களது குடும்பம் வசித்தது. வறுமையால் வாடிய போது புத்தகங்கள் மட்டுமே இவரது பொழுதுபோக்காக இருந்தது. தந்தை காலமானதும், படிப்பைத் தொடர்ந்துகொண்டே சிறு சிறு வேலைகள் பார்த்தார்.
பள்ளிப் படிப்பை முடித்து, கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட்டார். மருத்துவப் பிரிவில் பணியாற்றியவர் மருந்துகள், நோய், மருத்துவப் பிரச்சினைகள் குறித்து ஆழமாகத் தெரிந்துகொண்டார். ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளநிலை, உயிரி வேதியியலில் முதுநிலை பட்டம் பெற்றார். வெய்ஸ்மான் கல்வி நிறுவனத்தில் எக்ஸ்ரே படிகவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இஸ்ரேலின் முதல் உயிரியல் படிகவியல் ஆய்வகத்தைத் தொடங்கிவைத்தார்.
நோய்க் கிருமிகளிடம் இருந்து நம்மை ஆன்டிபயாடிக் மருந்து எவ்வாறு பாதுகாக்கிறது என்று கண்டறிந்தார். 20 ஆண்டுகாலம் கடும் உழைப்பை செலுத்தி சக்தி வாய்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்ய வழிவகுத்தார். வேதியியலில் நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலியப் பெண் என்ற பெருமைக்கு உரியவர் அதா யோனத்.