

ஒரு குளத்தில் நிறைய மீன்கள் வாழ்ந்துகொண்டிருக்கின் றன. அந்தக் குளம் மட்டுமே மீன்களின் உலகம். அவற்றால், இடது, வலது என இரண்டு பக்கங்களில் மட்டுமே
நீந்த முடியும். மேலும், கீழும் நீந்தாது. சுருக்க மாகச் சொன்னால், அவை இரு பரிமாண (Two Dimensional) உலகில் வாழ்கின்றன.
ஆகவே அவற்றால், இடது-X, வலது-Y அச்சுகளில் மட்டுமே நகர முடியும். மேலேயோ கீழேயோ நீந்தும் (Z அச்சு) வசதி அவற்றுக்கு இல்லை. ஒரு நாள் மழை பொழிகிறது. மழைத் துளிகள் குளத்துத் தண்ணீரின் மேற்பரப்பில் விழுகின்றன.
உள்ளிருந்து மீன்கள் மேலே பார்க்கும்போது, மேற்பரப்பில் பல சிற்றலைகள் (Ripples) தோன்றுவதைக் கண்டுவியக்கின்றன. அவற்றுக்கு மழை பெய்வது தெரியவில்லை. குளத்துக்கு மேலே செல்ல முடியாததால், வானத்தில் இருந்து விழும் மழையை மீன்களால் காணமுடியவில்லை.
அதனால், மேற்பரப்பில் தோன்றும், சிற்றலை களை, கண்ணுக்குத் தெரியாத ஒரு மர்ம சக்தி உருவாக்குவதாக நினைத்துக்கொள்கின்றன. மீன்களைச் சொல்லிக் குற்றமில்லை. நாமும் அப்படித்தான். மூன்றாம் பரிமாணத்தில் (Third Dimension) இருந்துகொண்டு உயர் பரிமாணங்களை அறியாமல் இருக்கிறோம்.
ஐந்தாம் பரிமாணம்!
ஐன்ஸ்டைன் பொது சார்பியல் கோட் பாட்டைக் கண்டறியும்வரை, இயற்பியலில் இடமும் (Space) காலமும் (Time) தனித்தனியே கருதப்பட்டன. அவர் ஈர்ப்புவிசையை வரை யறுத்தபோது, இடத்தையும் காலத்தையும், இணைத்து புதிய ‘கணிதத் தொடரி’யாக (Mathematical Continuum) உருவாக்கினார்.
அதுவரை மூன்றாம் பரிமாணம் என நினைத்துக் கொண்டிருந்த, பிரபஞ்சத்தையும் காலத்தையும் (Time) சேர்த்து நான்காம் பரிமாணமாக, அவர் மறுஉருவாக்கம் செய்தார். சார்பியல் கோட்பாடு, ஈர்ப்புவிசையை (Gravity), நான்காம் பரிமாணத்தின் (fourth Dimension) ‘வளைதல்’ (Space-Time Curvature) என்று, ஒரு வடிவமாகக் காட்டியது.
இதனால் ஈர்க்கப்பட்ட தியடோர் கலூசா, ஆஸ்கர் கிளைன் ஆகிய அறிவியலாளர்கள், சார்பியல் சமன்பாடுகளில், நான்காம் பரிமாணத்துக்குப் பதிலாக ஐந்தாம் பரிமாணத்தைக் (Fifth Dimension) கணிதரீதியாக ஆர்வத்துடன் பொருத்திப் பார்த்தார்கள்.
ஆனால், வியக்கத்தக்க விதத்தில், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு, தனிவிசையாக பயன்பாட்டில் இருந்த மின்காந்தவிசை (Electro magnetic Force) தானாகவே அங்குவந்து அமர்ந்தது.
அதாவது, ஐன்ஸ்டைனின் சமன்பாட்டில் நான்காம் பரிமாணத்தை பொருத் தினால், விடை ஈர்ப்புவிசை என்று கிடைத்தது. அதே இடத்தில் ஐந்தாம் பரிமாணத்தைப் பொருத்தினால், விடை மின்காந்த விசை.
ஐன்ஸ்டைனின் ஈர்ப்புவிசையும், மாக்ஸ்வெல் லின் மின்காந்தமும், ஒரே குடையின்கீழ் வந்த மகத்தான அந்தத் தருணம், இயற்பியல் உலகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
சிறிய வளையம்
சரி, ஐன்ஸ்டைன் ஈர்ப்புவிசைக்கு ஒரு வடிவம் கொடுத்ததுபோல, கலூசா-கிளைன், ஐந்தாம் பரிமாணத்தில் (5D) காட்சியளித்த மின்காந்த விசைக்கும் ஒரு வடிவத்தைக் கொடுத்திருக்க வேண்டும் இல்லையா? ஐன்ஸ்டைனின் நான்காம் பரிமாண-வடிவியல் (Geometry), பிரபஞ்ச சமதளத்தில் ஏற்படும் பள்ளம் (Curved Space-Time) என்றால், கலூசா-கிளைன் சொன்ன மின்காந்த விசையின் வடிவியல், பிரபஞ்சத் தளத்தின் ஒவ்வோர் அணுவிலும் இணைக்கப்பட்ட ‘சிறிய வளையம்' (Ring). அணுவைவிட கோடிக்கணக்கான மடங்கு, சிறியதான, அந்த ஐந்தாம் பரிமாண வட்ட வடிவங்கள், நம் பார்வைக்கு அப்பாற்பட்டவை.
குளத்து மீன்களைப் போலதான் நாமும். குளத்து மீன்களுக்கு மழை பெய்வது தெரியாமல், சிற்றலைகள் (Ripples) மட்டும் தெரிவதுபோல, மூன்றாம் பரிமாணத்தில் (3D) வாழும் நமக்கு, ஐந்தாம் பரிமாண வளையங்களில் ஏற்படும் அதிர்வுகளே ஒளியாகத் (மின்-காந்தவிசை) தெரிகின்றன.
அதாவது, ஐந்தாம் பரிமாணத்தில் நடக்கும் செயலை, நம்முடைய மூன்றாம் பரிமாணத்தில் ஒளியாகப் பார்க்கிறோம். உண்மையிலேயே, அங்கே என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது.
இதுபோல அணுக்கரு விசைகள் (Nuclear Force), அணுத்துகள்களின் (Particles) பிறப்பு, இருண்ட ஆற்றல் (Dark Energy) எனப் பேரண்டத்தில் புதைந்திருக்கும் ரகசியங்களுக்கு, விளக்கங்களாக எத்தனை உயர் பரிமாணங்களுக்குப் போவது? ஆனால், இதற்கு எண்ணிலடங்கா பரிமாணங்கள் தேவையில்லை.
“உயர் பரிமாணங்கள் (Higher Dimensions) கொண்ட பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது, பதினொரு உயர் பரிமாணங்களில் அதிரும், நுண்-இழைகளின் வெவ்வேறு நடனங்களே” என்று சரக்கோட்பாடு (String Theory) சொல்கிறது.
(தொடர்ந்து தேடுவோம்)
- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com