சிவப்பு வண்ணத்தில் சுழிப்பதைத் தவிர்ப்போம்

சிவப்பு வண்ணத்தில் சுழிப்பதைத் தவிர்ப்போம்
Updated on
2 min read

ஆசிரியர்களுக்கே உரித்தான குணம், மாணவர்கள் தவறுசெய்யும் இடங்களில் எல்லாம், அது நோட்டுப்புத்தகம் என்றாலும், விடைத்தாள் என்றாலும் சிவப்பு வண்ணத்தால் சுழிப்பது. சிவப்பு பேனாவால் கோடிடுவதால், சுழித்து விடுவதால் எந்தப்பயனும் இல்லை.

தவறு செய்த இடத்தில் திருத்தம் மேற்கொள்வதும் அந்தத் தவறு குறித்துக் கலந்துரை யாடுவதும் அதனைப் புரியவைப்பதும் மிகவும் அவசியம். ஏனெனில் சரி செய்தலே தவறைச் சுட்டிக்காட்டுதலின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதாக அது மாறிவிடக் கூடாது.

தவறு செய்தல் மனித இயல்பு. இதுவரை தவறே செய்யாத மனிதர்கள் உண்டா, அவ்வாறு இருப்பது சாத்தியமா, தவறு இல்லையெனில் சரி என்கிற சொல்லுக்குப் பொருள் ஏது? பிழை இன்றிக் கற்கும் எதுவும் நிலைத்திராது. பிழை இல்லாத ஆங்கிலத்தில்தான் பேசுவேன் என அடம்பிடித்தால் என்றைக்குப் பேசுவது. கணக்கில் புலி என்றாலும் தவறிழைப்பது சகஜம்தானே. ஒரே ஒரு பிழையும் இன்றித் தாய்மொழி பேசும் நபரைக் கண்டது உண்டா.

சரி பார்த்தல் அவசியம்: வகுப்புத் தேர்வுகளில் 100க்கு 100 பெறும் சில மாணவர்கள் பொதுத் தேர்வில் கோட்டை விடுவது உண்டு. ஏனெனில் எல்லா நேரமும் முழு மதிப்பெண் பெறுவது சாத்தியம் இல்லாதது. நன்கு அறிந்த கேள்வியின் பதில், அந்த நேரத்தில் நம் மூளையை எட்டாமல் போவது சகஜம்தான். மட்டுமின்றி, நம்மையே அறியாமல் தவறு இழைப்பது உண்டு.

ஆசிரியர் விடைத்தாளைத் திருத்தி கொடுத்த பிறகு அல்லது சக மாணவர்களுடன் உரையாடும் போதுதான், “அடடா இப்படி எழுதிவிட்டோமே” எனச் சுதாரித்துக்கொள்வோம். அனைத்து விடை களையும் அறிந்திருந்தும், நம்மை அறியாமலேயே தவறிழைக்கிறோம்.

தவறுகளை, ஆசிரியர்களால் மட்டும் எளிதில் கண்டுபிடிக்க முடிவது, ஏன்? பார்த்த உடனே தவறுகளே முதலில் புலப்படுகின்றன. ஓர் ஆசிரியராக, நானும் இதைப் பலமுறை உணர்ந்தது உண்டு. தவறுகளைக் கண்டறிவதால் அதைச் சரிசெய்ய ஒரு வாய்ப்பு கிடைத்ததாக எண்ணுவோம். இதுவும் நன்மைக்கே.

தவிர்க்க வழி: தேர்வின் கடைசி 15 நிமிடங்கள் நாம் எழுதிய வற்றைச் சோதித்துப் பார்க்கும் நேரம். சரி பார்த்தல் என்பது நாம் சரியாகத்தான் எழுதி இருக்கிறோம் என்கிற ஒரே பார்வையில் பாராது, தன்னை ஓர் ஆசிரியர்போல் கருதி விடைகளைக் கவனிக்க வேண்டும். அப்போது தவறுகள் நிச்சயம் புலப்படும்.

எல்லாரும் எல்லா நேரமும் எல்லா செயல்களி லும் தவறுகள் இன்றி நடப்பது சாத்தியமற்ற ஒன்று.

ஆனால், அந்தத் தவறைக் கண்டறிந்து சரிசெய்ய இயலும். கணிதப் பாடத்தில் கவனக் குறைவால் மதிப்பெண் குறைவதே அதிகம். ஒருநிலை மனதோடு தேர்வு எழுதினால் தவறுகளைத் தவிர்க்கலாம்.

தேர்வுக்காக நாம் எவ்வளவு நேரம் படித்தோம், கடினமாக உழைத்தோம் என்பதைக் காட்டிலும் தேர்வு எழுதும் நேரமே நம் மதிப்பெண்ணை நிர்ணயிக்கிறது. முழுமையான பயிற்சி, கவனத்துடன் தேர்வு எழுதினால் முழு மதிப்பெண் நம் வசம். தவறு செய்து திருத்திக்கொள்ளும் எதுவும் நிலைத்து நிற்கும்.

- கட்டுரையாளர்: சுப்ரஜா ஜெயக்குமார், கணித ஆசிரியர், எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் ஸ்கூல், திருச்சிராப்பள்ளி; suprejajk@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in