

வழக்கொழிந்த கற்றல் முறைகளைப் பயன்படுத்தும் கல்வி முறை மற்றும் தகவல்தொழில் நுட்ப வசதிகள் இல்லாத வகுப்பறைகள், ஓராசியர் பள்ளிகள், வகுப்பறைக்குள் நுழைந்துள்ள சாதியக் கூறுகள், கற்றுத்தருதலில் உள்ள புரியாமை, தண்டனை தரும் பயம் குறித்த களங்களைப் பற்றி பேசுவதாக ”ஓய்ந்திருக்கலாகாது கல்விச் சிறுகதைகள்” புத்தகம் அமைந்துள்ளது.
இந்நூலில் 13 எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் உள்ளன. இந்தக் கதைகளை எழுதியஎழுத்தாளர்கள் பல்வேறு நிலப்பரப்பை சார்ந்தவர்களாகவும் மாறுபட்ட சமூக பின்னணியும்குடும்பச் சூழலைக் கொண்டவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் பள்ளிக்கூட நினைவுமுழுவதும் மகிழ்ச்சியளிக்க கூடியதாக இல்லை என்பதைக் கதைகள் உணர்த்துகின்றன. அரசி மற்றும் ஆதி வள்ளியப்பன் இச்சிறுகதைகளை தொகுத்திருக்கிறார்கள்.
பள்ளித்தளம் - ச.பாலமுருகன்: சமவெளி மக்களின் வாழ்வியல் முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்வியலோடு வாழும் பழங்குடியின மக்களின் கல்வி முறை குறித்து உரக்க பேசித்தான் ஆக வேண்டும்.
அங்கு பள்ளிகள் இயங்கும் முறைகள் குறித்தும் , பதிவேடுகளில் மட்டும்இருக்கும் ஆசிரியர்களின் வருகை, அங்குள்ள மக்களின் கல்வி பற்றிய கனவுகளை அனைவரும் அறிய வேண்டும்.
அடிப்படை உரிமையான கல்வியைப் போராடி பெற்ற அவலம், அந்தக் கல்வியும் முறையாக அவர்களுக்கு கிடைத்ததா என்பதை பள்ளித்தளம் சிறுகதையில் கேள்வியாக விட்டுவிடுகின்றார் எழுத்தாளர்.
காலம் மாறிவிட்டது என்போம், இப்போ எல்லாம் யார் சாதி பார்க்கின்றார்கள் என்கின்ற கருத்தைக் கேட்கிறோம். கல்வியினால்சாதியின் ஏற்றத்தாழ்வுகளை வேரோடு அழிக்கமுடியும் என்று சொல்லும் நிலையில், பள்ளிக்கூடத்திற்குள்ளே சாதியத்தின் கூறுகள் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே எவ்வாறு வேரூன்றி இருக்கிறது என்பதை பாமாவின் எளக்காரம் கதையில் காணமுடிகிறது.
ஆதாரம் - லட்சுமண பெருமாள்: தான் என்ன சாதி என்ற ஆதாரம் இல்லாத காரணத்தினால் அம்மாசி என்கிற மாணவன் 9-ம் வகுப்புக்கு போக முடியாமல் தவிக்கும் பரிதாப நிலையே ஆதாரம் சிறுகதை. அம்மாசியின் அம்மா எவ்வளவு சொல்லியும் ஊரில் உள்ள ஒருவர் கூட அவளுக்கான சாதி சான்றிதழ் வாங்குவதற்கு உதவி செய்யவில்லை. இன்றும்கூட ஆதாரம் இல்லாத காரணத்தினால் சாதி சான்றிதழ் வாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அன்னாசியின் சாயலில் மாணவர்களைப் பார்க்கிறோம்.
பிரம்புபதேசம் - மேலாண்மை பொன்னுசாமி: ”அகரம் கற்றுக்கொடுத்து சிகரம் ஏற்றுகிற ஆசிரியா்கள், பிள்ளைகளின் மூன்றாவது கண் ஞானக்கண் , பிள்ளைகளின் பிறவிக் கண்களுக்கு முழு வெளிச்சமும், அர்த்தமும் வழங்குவதே இந்த மூன்றாவது கண்தான்” என்று மேடையில் விளாசித் தள்ளும் பரமசிவம் வாத்தியார், மாணவர்களை அடிப்பதால்தான் அவர்கள் நன்றாக படிப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அடியினால் மாணவர்களுக்கு ஏற்படும் பயத்தின் காரணமாக பலர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய நிலையினை அறிந்து கவலையடைகிறார். ஒரு மாணவன் அடிக்கு பயந்து திருந்தினான் என்றால், எல்லோருக்குமே அது பொருந்துமா ? என்கிற கேள்வியினை எழுப்புகிறார் எழுத்தாளர்.
நடத்துற பாடங்களிலே நல்ல தெளிவும் நடத்துற முறையிலே தன்னம்பிக்கையும் இருந்தால், ஒரு நல்ல ஆசியரியருக்குப் பிரம்போட உதவி எந்த நேரத்திலும் தேவைப்படாது என்ற உண்மையை பிரம்பு வாத்தியார் உணர்கிறார்.
உணர்த்தும் நீதி: சாதியினாலும் பொருளாதாரத்தினாலும் பின்தங்கியிருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தன்னுடைய பிள்ளைகள் கல்வியினால், சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்கிற மனப்போராட்டமே இத்தொகுப்பு நூலின் சாராம்சம் ஆகும். இந்நூல் சமகால கல்விச் சிக்கல்கள் குறித்து அறிய உதவும்.
- ம. பரிமளா தேவி | கட்டுரையாளர் முதுகலைத் தமிழாசிரியை, திருப்பத்தூா் மாவட்டம்.