Last Updated : 28 Feb, 2023 06:08 AM

 

Published : 28 Feb 2023 06:08 AM
Last Updated : 28 Feb 2023 06:08 AM

இந்திய அறிவியல் நாள் | உலக நலனுக்கான உலக அறிவியல்

இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர், சர்.சி.வி.ராமன் என்றழைக்கப்படும் சந்திர சேகர வெங்கட்ராமன். அவர் நோபல் பரிசைப் பெறுவதற்குக் காரணமாக அமைந்த ‘ராமன் விளைவு’ என்னும் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்ட நாளே இந்தியாவில் தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

திருச்சி திருவானைக்காவில் பிறந்த சி.வி.ராமன், விசாகப்பட்டினத்தில் பள்ளிக் கல்வியை நிறைவுசெய்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

அதோடு, அந்நகரில் செயல்பட்டுவந்த இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் தன் இயற்பியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1928இல் ‘ஒளி புகக்கூடிய ஓர் ஊடகத்தின் வழியாகப் பாயும் ஒளியின் அலைநீளம் ஏன் மாறுகிறது’ என்பதை விளக்கினார்.

இது அவரது கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டு, ‘ராமன் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. இதற்காக 1930இல் சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிப்ரவரி 28 அன்றுதான் ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டது என்பதால், அந்த நாளை தேசிய அறிவியல் நாளாக 1986 இல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய மன்றம் (National Council for Science and Technology) அறிவித்தது. இதன்படி 1987முதல் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் நாளை இந்திய அரசு கொண்டாடி வருகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய மன்றம் அறிவியலை மக்களிடையே பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, இந்திய அரசின் அறிவியல் & தொழில்நுட்பத் துறையின் கீழ் வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் அறிவியல் நாள் கொண்டாட்டத்துக்கான திட்டங்களுக்கு இந்த அமைப்பே ஒப்புதல் அளித்து ஒருங்கிணைக்கிறது.

1999 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் தேசிய அறிவியல் நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடப்படுகின்றன. 2023ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் நாள் கருப்பொருள், ‘உலக நலனுக்கான உலக அறிவியல்’ (Global Science for Global Wellbeing).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x