Last Updated : 28 Feb, 2023 06:14 AM

 

Published : 28 Feb 2023 06:14 AM
Last Updated : 28 Feb 2023 06:14 AM

இந்திய அறிவியல் நாள் | இந்திய அறிவியலின் தூதர்கள்

அரவிந்த் குப்தா

இந்தியாவில் மாணவர்களுக்கும் சாதாரணர்களுக்கும் அறிவியலை எடுத்துச் செல்லும் முயற்சியில் இடையறாது இயங்கியவர்கள்: பேராசிரியர் யஷ்பால், இந்திய வான்இயற்பியலாளர் ஜெயந்த் நாரலீகர், எளிய முறை அறிவியல் கருவிகளைப் பிரபலப்படுத்திய அரவிந்த் குப்தா.

தூர்தர்ஷன் அலைவரிசையில் பேராசிரியர் யஷ்பால் வழங்கிய ‘டர்னிங் பாயின்ட்’ என்கிற வாராந்திர அறிவியல் நிகழ்ச்சியும், ‘சயின்ஸ் ஃபார் ஆல்’ நிகழ்ச்சியும் புகழ்பெற்றவை. 1990களில் பெரிய வசதிகள் இல்லாத காலத்தில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிகள், மக்களிடையே அறிவியலை நெருக்கமாக எடுத்துச்சென்றன.

இன்றைக்கு எத்தனையோ வசதிகள் பெருகிவிட்டபோதும்கூட, அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சிகள் அதிகரிக்கவில்லை. அவரைத் தொடர்ந்து அறிவியல் ஆர்வத்தைத் தட்டியெழுப்பும் பல நூல்களை மாணவர்களுக்கும் சாதாரணர்களுக்கும் ஜெயந்த் நாரலீகர் எழுதினார்.

மாணவர்களைச் சந்தித்து அறிவியல் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர், அந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களிடம் ஆளுக்கு ஓர் அறிவியல் கேள்வியை எழுதி அனுப்பச் சொல்வார். அடுத்த நிகழ்ச்சியில் அதற்குப் பதில் சொல்வார்.

அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க இது ஒரு புதுமையான வழி. அவர் எழுதி நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ‘A Journey Through The Universe’ – வான்இயற்பியல் குறித்த பிரபலமான அறிமுகப் புத்தகம்.

எளிய பொருள்களைக் கொண்டு அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் பொம்மைகளைச் செய்யும் வழிமுறைகளை நாடு முழுக்கப் பிரபலப்படுத்தியவர் அறிவியலாளர் அரவிந்த் குப்தா. இவர் நடத்திவரும் இணையதளத்தில் (https://www.arvindguptatoys.com/) குழந்தைகளும் பெரியவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பல நூறு நூல்கள் இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றன.

அறிவியல் துறைகள் பற்றி மட்டுமல்லாமல், தற்போது அச்சில் இல்லாத, நம் நாட்டில் வாங்க முடியாத பல்வேறு புத்தகங்கள் இந்தத் தளத்தில் அறிவை பரப்பும் நோக்கத்துடன் பதிவேற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x