Last Updated : 22 Feb, 2023 06:15 AM

 

Published : 22 Feb 2023 06:15 AM
Last Updated : 22 Feb 2023 06:15 AM

புத்தகக் காட்சிகளில் இளையோர் எங்கே?

சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் எத்தனை லட்சம் பார்வையாளர்கள் மற்றும் எத்தனை கோடி புத்தகங்கள் விற்றன என்ற கணக்கு வெளியிடப்பட்டது. வந்தவர்களை டிக்கெட் விற்றதின் அடிப்படையில் கூறுகின்றனர். குழந்தைகள் இந்தக் கணக்கில் இல்லை. இளையோர் எந்த கணக்கிலும் இல்லை. எனில் மிகச் சொற்பமான இளையோர்களே இந்தக் கண்காட்சியை பார்வையிட வந்தார்கள்.

மற்ற சிறுநகரங்களில் புத்தகக் காட்சி நடக்கும்போது அந்தந்த பகுதி அரசு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். பள்ளிக் கல்வித்துறையுடன் சேர்ந்து இந்த ஏற்பாடு நடந்தது. அங்கேயும் பெரும்பாலும் 10-ம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்குத் தடை. அழைத்து வந்த முறையிலும் சுற்றிப் பார்க்க நேரம் கொடுத்ததில் ஆசிரியர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது என நிறைய விமர்சனம் உள்ளது. அதனை வரும் ஆண்டுகளில் சரி செய்ய முனைவோம். ஆனால், வளரிளம் பருவத்தினர் ஏன் புத்தகக் காட்சிகளில் அவ்வளவாக காணவில்லை?

கல்லூரி மாணவர்கள் என்று பார்த்தாலும் சென்னையின் கல்லூரிகளையும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளையும் கணக்கில் கொண்டால் மிகமிக சொற்பமே. ஆனால், உண்மையில் இளம்பருவ வயதினருக்கே புத்தகங்கள் இன்னும் இன்னும் அவசியம். ஒரு புத்தகம், ஒரு வரிகூட அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போடக் கூடும்.

இப்போது தீவிர வாசகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சாதனையாளர்கள் என யாரை எடுத்தாலும் இளம்வயதில் ஏற்பட்ட தீப்பொறியை இன்றைய வெற்றிக்கும் ஆளுமைக்கும் காரணம் என்பார்கள். அப்பொறி நிறைய நிறையப் புத்தகங்களில் புதைந்துள்ளது. பொறி மட்டும் போதாது, தொடர்ச்சியான உழைப்பும், செயல்பாடும் அவசியம் என்றாலும் ஆரம்பம் அவசியம் அல்லவா.

என்ன ஏற்பாடு? - இளையோரை புத்தகக் காட்சிக்கு வரவழைப் பதற்கு என்ன ஏற்பாடு உள்ளது? அவ்வயதினர் அனைவரும் சமூக ஊடகங்களிலும், டிஜிட்டலிலும் மூழ்கி உள்ளனரா? இல்லை. தேர்வு பயம் என்ற ராட்சசனுக்குப் பயந்துள்ளனர். அல்லது பயம்காட்டி வைத்துள்ளோம்.

பள்ளி, ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவருக்குமே இந்த பயம் காட்டலில் பங்கு உண்டு. அதை உடைத்து எறிந்தால் மட்டுமே அடுத்தடுத்த நிலைக்கு நகர முடியும். புத்தக் காட்சிகளுக்கு இளையோர் செல்ல பழகுதல் அவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்.

என்னென்ன துறைகள் உள்ளன, உலகில் என்னென்ன நிகழ்கின்றன, நம் தொன்மம் என்ன, வரலாறு என்ன போன்றவற்றை புத்தகங்கள் வழி தெரிந்து கொள்ளலாம். பாடப்புத்தகத்தில் அனைத்தையும் கொடுக்க இயலாது. ஆகையால் எப்படித் தேடுவது என்று சொல்லிக் கொடுத்தாலே போதும் மெல்ல மெல்ல குழந்தைகளின் சிந்தனை வளம் பெருகும்.

சரி புத்தகங்கள் இருக்கின்றதா? - சரிப்பா நாங்கள் புத்தகக் காட்சிக்கு வருகிறோம். எங்களுக்கான புத்தகங்கள் இருக்கின்றனவா? இளையோர்களுக்கான புத்தகங்கள் என்றால் அது மிக மிகக் குறைவே. அவர்களை மனதில் வைத்து எழுதியுள்ள புத்தகங்கள் அதிகபட்சமாகக் கறாராகப் பார்க்கவில்லை எனில் நூறு தேறலாம்.

அந்த வயது ரசனைக்கு ஏற்ப, அந்த வயது குழப்பங்களைத் தீர்க்க, அந்த வயதினருக்கு ஏற்ப வழிகாட்டப் புத்தகங்கள் கட்டாயம் தேவை. ஒரு பக்கம் இதற்கான தீவிர வேலைகளில், பயிற்சிகளில், பட்டறைகளில், முனைப்புகளில், கலந்துரையாடல்களில் இறங்க வேண்டியுள்ளது. இந்த வயதினருக்கான சிக்கல்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் மாறுபடும். டிஜிட்டல் யுக இளையோர்களுக்கு இன்னும் மெனக்கெட்டு எழுத வேண்டி இருக்கிறது.

தொடக்கம்: எங்காவது ஒரு புள்ளியிலிருந்து தொடங்கவேண்டும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பகங்கள், புத்தகக் காட்சி ஒருங்கிணைப் பாளர்கள், வளரிளம் பருவப் பிரதிநிதிகள், அவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், நிபுணர்கள், மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் என எல்லோரும் அமர்ந்து கலந்துரையாடினால் புதிய உலகம் பிறக்கும்.

- கட்டுரையாளர் : சிறார் எழுத்தாளர்; தொடர்புக்கு: umanaths@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x