

வேற்று மொழிச் சொல்லுக்கு அகராதி இருப்பதுபோல் தமிழ் மொழிக்குள் இருக்கும் பல்வேறு வட்டார வழக்குகளுக்காகவும் தனி அகராதிகள் உண்டு. தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் முயற்சியால் தமிழுக்கு இந்த அருங்கொடையை அளித்துள்ளனர்.
அந்த வகையில் நெல்லையின் ஒரு பகுதியான ‘கரிசல் வழக்குச் சொல்லகராதி’யை கி.ராஜநாராயணன் தொகுத்துள்ளார். வழக்குச் சொற்கள், விடுகதைகள், சொலவடைகள், விளையாட்டுகள் என கரிசல் வாழ்க்கையைப் பற்றிய முழுமையான தொகுப்பு இது. வெள் உவன் ஏனைய நெல்லைப் பகுதிகளுக்கான ‘நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை’யை உருவாக்கியுள்ளார்.
சென்னைக்கு வெளியே வடதமிழ்நாடு என அடையாளப்படுத்தப்படும் பகுதியின் சொல் வழக்கு தனித்துவமானது. அந்தப் பகுதியின் வழக்குகளைத் தன் கதைகளில் எழுதியவர் கண்மணி குணசேகரன். அந்தப் பகுதியின் வழக்கை ‘நடுநாட்டுச் சொல்லகராதி’ என்ற பெயரில் தொகுத்துள்ளார்.
பேராசிரியர் அ.கா.பெருமாள் ‘நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி' என்ற பெயரில் நாஞ்சில் வட்டார வழக்கைத் தொகுத்துள்ளார். பொன்னீலன் ‘தென்குமரி வட்டார வழக்குகள்’ என்ற பெயரில் குமரி வட்டார வழக்குகளைத் தொகுத்துள்ளார்.
பெருமாள்முருகன் ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’யைத் தொகுத்துள்ளார். பழநியப்பா சுப்பிரமணியன் ‘செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்ல கராதி’யைத் தொகுத்துள்ளார். தஞ்சை வட்டார வழக்குச் சொல்லகராதியை பரிதி பாண்டியன் ‘நெற்களஞ்சியத்தின் சொற்களஞ்சியம்’ என்னும் பெயரில் தொகுத்துள்ளார்.