

தங்கள் காலத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் மட்டுமல்ல, மொழியையும் கல்வெட்டுகள் வாயிலாக நம் முன்னோர் ஆவணப்படுத்தியுள்ளனர். பாறைகள், தூண்கள், கோயில் சுவர்கள், செப்புத் தகடுகள் தொடங்கிப் பிற எழுது களங்களான கற்கள், பனையோலை, நாணயங்கள், மண்பாண்டங்கள் போன்றவற்றில் எழுத்துருக்களை வடித்துச் சென்றுள்ளனர். மொழியின் வரிவடிவ வளர்ச்சியை அறிந்துகொள்ளும் முதன்மை ஆவணங்கள் இவை.
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு களில் தமிழில் எழுதப்பட்டவையே அதிகம் (கிட்டத்தட்ட 20,000) என்கிறது Journal of the Epigraphical society of India Volume 9 - 1993 நூல். தமிழுக்கு அடுத்த இடங்களில் கன்னடம் (10,600), சம்ஸ்கிருதம் (7,500), தெலுங்கு (4,500) ஆகியவை உள்ளன. தமிழில் (பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டிலேயே கல்வெட்டுகள் எழுதப்பட்டுள்ளன.
இன்று இந்திய நாட்டில் உள்ள எழுத்துகள் பெரும்பாலும் பிராமி எழுத்துகளிலிருந்து வளர்ச்சி பெற்றவையே. இந்திய அகர வரிசை எழுத்துகளில் தொன்மையானது பிராமி எழுத்து. வட்டார வேறுபாடுகளுக்கு ஏற்ப இது தமிழ் - பிராமி, அசோகன் - பிராமி, வட இந்திய - பிராமி, தென்னிந்திய - பிராமி, சிங்கள - பிராமி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் - பிராமி எழுத்தை ‘தமிழி’ என்றும் சொல்வர்.
தமிழ் - பிராமி எழுத்து மூன்றாம் நூற்றாண்டு (பொ.ஆ.மு.) முதல் நான்காம் நூற்றாண்டு (பொ.ஆ) வரை வட்டார வேறுபாடுகளுடன் தொடர்ந்து வழக்கில் இருந்தது. கிரந்த எழுத்து, தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதத்தை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிவம்.
நாகரி எழுத்து வடிவத்தில் நந்திநாகரி, தேவநாகரி ஆகிய இருவகை எழுத்துகள் சம்ஸ்கிருதத்தை எழுதப் பயன்பட்டன. வட்டமான கோடுகளைக் கொண்ட வட்டெழுத்தும் கல்வெட்டு எழுத்துதான். இவை தவிர பிறநாட்டு மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் இந்தியாவில் உண்டு.