மதிப்பெண்கள் தற்காலிகமானதே...

மதிப்பெண்கள் தற்காலிகமானதே...
Updated on
2 min read

சமுதாயம் நம் தேவைகளுக்காக பள்ளிக்கூடங்களை உருவாக்கி ஆசிரியர்களையும் நியமித்தது. அங்கு மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். அந்தந்த காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்கள் தீட்டப்பட்டு போதிக்கப்பட்டது. மொழியையும், கணிதம் அறிவியல், சமூக அறிவியலையும் போதித்ததோடு நன்னெறி கல்வியும் விளையாட்டும் கற்பிக்கப்பட்டது. அன்று நன்னெறி கல்வியில் போதிக்கப்பட்ட கதைகள் வெறும் கதைகளாக இல்லை. மாணவர்களின் வாழ்க்கை பாதைகளை தீர்மானிக்கும் விதியின் விதைகளாக இருந்தன. மொழியும் பாடங்களும், பணியும் ஊதியமும் கொடுத்தது. பெற்ற செல்வத்தைக் கொண்டு வளமான, மகிழ்வான வாழ்வை அடைவதற்கும் அனுபவிப்பதற்கும் பாதை போட்டு தந்தவை நன்னெறி கல்வியும், குடும்பப் பாரம்பரியமும் சமூகச் சூழலுமே. அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், எந்திரங்களின் ஆதிக்கம், ஊடகங்களின் உபயோகம்உலகப் பொருளாதாரம், தாராளமயமாக்கல் என உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் மனித வாழ்க்கையை புரட்டிப்போடத் தொடங்கியது.

பொருளாதாரத்தின் பின்னால் மனித இனம் ஓட தொடங்கியது. பொருளாதாரம் வளரத் தொடங்கியது. மனிதன் மறைய தொடங்கினான். மனிதம் அழியத் தொடங்கியது. விளைவு அவரவர் தங்களது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இழந்து முகவரியை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கிறோம். அறிவை பெறுவதாக நினைத்து ஆரோக்கியத்தையும், ஆனந்தமான வாழ்வையும் விற்கிறோம். கற்ற கல்வியும் பெற்ற அறிவும்நம்மை வாழ வைப்பவையாக இருக்கவேண்டும். மாறாக நம்மை அழிக்குமேயானால் அவற்றின் வடிவத்தை மாற்றிக் கொள்வது ஒன்றே இன்றைய தேவை.

பள்ளிக்கூடங்கள் நல்ல அறிவை வளர்ப்பதையும் இலக்கியங்களில் உள்ள இன்பங்களை நுகரச் செய்வதையும், பெற்ற அறிவை பகிர்ந்து கொள்வதையும், நமது மொழியில் உள்ள வளங்களை பிற மொழியினருக்குசொல்லி பெருமைப்படுவதையும், நோக்கமாகக் கொண்டு செயல்பட்டகாலம் போய் கல்வி என்பது பட்டம் பெறுவதற்கும் வேலை வாய்ப்பிற்காகவும்தான் என்று மாறத் தொடங்கி, இன்று உயர்ந்த ஊதியம் பெறுவதற்கு எதை படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் என்பதை இயந்திரத்தனமாக செய்யத் தொடங்கியுள்ளது.

முழுமதி மணியன்
முழுமதி மணியன்

வகுப்பறை என்பது சமுதாயத்தின் நாற்றங்கால் என்பது நம் முன்னோர்களின் சிந்தனை. ஆகவே வகுப்பறையில் உங்கள் வாழ்வை உருவாக்குங்கள். பாடங்களை ரசித்து படியுங்கள். கேள்வி கேட்டு படியுங்கள். வாசித்துப் பாருங்கள். வாசித்தலை சுவாசித்தலாய் மாற்றுங்கள். இருட்டில் ஒளி தெரியும். ஒரு நாள் நீயே ஒளியாய் தெரிவாய்.

மதிப்பெண் பெறுவதற்காக தேர்விற்காக என்றில்லாமல் பாடங்களை முழுமையாக படித்து பழகுங்கள். சிறந்த கருத்துக்கள் உன்னுள் புகுந்து மிகச்சிறந்த கருத்துகளாக வெளிவரும். எப்படி பலவகையான வண்ணங்களும் ருசியும் தன்மையும் கொண்ட உணவு நம் வயிற்றுக்குள் பயணித்து ரத்தமாகவும், ஆற்றலாகவும், கழிவாகவும் மாறுகிறதோ அதேபோல் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் கற்கும் எதுவும் உனக்குள் நுழைந்து உன்னிலிருந்து உயர்ந்த கருத்துகளாய் வெளிவரும். உன் மதிப்பும் உயரும்.

மதிப்பெண்கள் என்பவை தற்காலிகமானவை. மதிப்பு என்பது நிரந்தரமானது. மரணம் கடந்து நம்மைவாழவைக்கும் பல கண்டுபிடிப்பாளர்களும் சாதனையாளர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள்இல்லை. கணிதமேதை ராமானுஜமும், சச்சின் டெண்டுல்கரும் பள்ளிப்படிப்பில் மதிப்பெண்களை குவிக்கவில்லை. நீங்கள் உங்களுக்காக படியுங்கள் உங்களுக்காக உணவை நீங்கள் தானேஉட்கொள்கிறீர்கள். உங்களுக்கானசுவாசத்தை உங்கள் நாசிகள் தானேசுவாசிக்கின்றது. ஆதலால் மாணவர்களே உங்களுக்காக படித்து உயர்வதையும் பொருளாதாரத்திற்காக படிப்பதை தவிர்த்து பொருள்பட படித்துமுன்னேறுவதையும் குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து காட்டுங்கள் அடுத்த தலைமுறைக்கு. வெற்றி பெற உழைப்போம். உழைப்பினால் வெற்றி பெறுவோம்.

கட்டுரையாளர்

கல்வியாளர்

மயிலாடுதுறை

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in