

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு மன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. இவ்வகை போட்டிகள் மாணவர்கள் தங்களை மேலும் பல்வேறு வழிகளில் மெருகேற்றிக் கொள்ள வழிகாட்டுகிறது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் கல்வி இணை செயல்பாடுகள், கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சிறார் திரைப்படங்கள்
பல்வேறு மாநில மொழிகளில் தி கிட், சில்ரன் ஆப் ஹெவன், தி ரெட் பலூன், குப்பசி கல்ளூ, ஷ்வாஸ், மாடர்ன் டைம்ஸ், மல்லி(தமிழ்) ஆகிய திரைப்படங்கள் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு காட்டப்பட்டது. தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை, அன்பு, பாலின சமத்துவம், மூடநம்பிக்கை ஆகியவை சார்ந்த தனிநபர் மற்றும் குழு பிரிவுகளில் போட்டி நடைபெறும்.
இலக்கிய மன்றம்
நான் படித்த புத்தகம், நான் போற்றும் தலைவர், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, கல்வியும் கல்லாமையும் ஆகிய கருப்பொருள்களில் போட்டி கள் நடைபெறும். கட்டுரை எழுதுதல், கதையை முழுமைப்படுத்துதல், பேச்சு போட்டி ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
வினாடி - வினா மன்றம்
சிறுசிறு குழுக்களாக பிரித்து நாக்-அவுட் சுற்றுகள் நடத்தப்பட்டு இறுதியாக பத்து அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிச்சுற்று போட்டி நடத்தப்படும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் தேன்சிட்டு இதழில் இருந்தும், போட்டிக்கு முந்தைய ஒரு வாரம் பல்வேறு நாளிதழ்களில் வந்துள்ள பொது அறிவு, நாட்டு நடப்பு சார்ந்தும் கேள்விகள் இடம் பெறும்.
வானவில் மன்றம்
அன்றாட வாழ்வில் காற்றழுத்தம் வெப்பம், வேதியல், ஒளி, மாதிரி தயாரித்தல் ஆகிய கருப்பொருளில் தனிநபர் நிகழ்வாக போட்டி நடைபெறும்.
வட்டார அளவில் சிறார் திரைப்படங்கள் சார்ந்த போட்டி இன்று (பிப். 20) முதல் 22 வரையிலும் வினாடி வினா மன்றம் போட்டி பிப். 27 முதல் மார்ச் 1 வரையிலும், வானவில் மன்றம் சார்ந்த போட்டியில் மார்ச் 6 முதல் 8 வரையிலும் நடைபெறுகிறது.
பாட புத்தகம், மதிப்பெண் முறை, மன அழுத்தம் என்பதை தாண்டி மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் திறனை கலை திருவிழாக் களும், பள்ளிகளில் செயல்படும் கல்வி சாரா மன்றங்களும் வெளிக்கொண்டு வருகின்றன. பள்ளிகளில் செயல்படும் பல்வேறு மன்றங்களின் பொறுப்பாசிரியர்கள் மிகுந்த முனைப்புடன் செயல் படும்போது மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் இதில் ஈடுபடுவார்கள். இந்த மன்றங்கள் திறமை மிக்க மாணவர்களை உலகிற்கு காட்டும்.
கட்டுரையாளர்
ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம்.
ஆத்தூர் ஒன்றியம்.
திண்டுக்கல் மாவட்டம்.