களத்தில் பிரச்சினைகளைப் பேசுவோம்...

களத்தில் பிரச்சினைகளைப் பேசுவோம்...
Updated on
2 min read

வாசிப்பு பேசுபொருள் ஆகிவருகிற காலமிது. முக்கியமாக எளிய வீட்டு குழந்தைகளின் வாசிப்பு குறித்து கவனப்படுத்தும் பதிவுகளை தொடர்ந்து காணமுடிகிறது.

எதார்த்தத்தில் நடப்பது என்ன?

‘வாசிக்க நேரமில்லை' எனும் பொய்யை சிரிக்காமல் சொல்லிவிடுகிறோம். கேட்போரும் அதே நிலையில் இருப்பதால் இது சகஜமாகிவிட்டது. ஓர் நல்ல வாசகன் கால ஓட்டத்தில் இழந்த வாசிப்புப் பழக்கத்தை வெளியில் மறைக்கவே முயல்கிறான் (இதற்கு நானும் பல நேரங்களில் உதாரணமாகி இருக்கிறேன்). தினசரி வாசித்த பழைய கவுரவத்தை இழக்காமல் பிறரை 'ஏன் வாசிப்பதில்லை' என கூசாமல் கேட்டு விடுகிறான். அதிலும் ஆசிரியர்களைக் கேட்பதென்றால் அல்வா சாப்பிட்ட மாதிரி.

''ஆசிரியர்களே வாசிப்பதில்லை; பிறகெப்படி குழந்தைகள் வாசிப்பார்கள்! என்கிற குரல் இன்று நேற்றல்ல, எப்போதும் இருப்பதுதான். ஏதோ இந்த தலைமுறை ஆசிரியர்களுக்காக புதுசா கண்டுபிடித்ததில்லை. அதே நேரத்தில் அதுஆசிரியர் என்கிற நிலையில் இருந்து கல்வி அலுவலர்கள், கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள் என்று விரிவாக பொருள் கொள்ள வேண்டும்.

வாசிக்க நூல்களும், வாசிக்கும் இடங்களும் பெருக வேண்டும். புத்தகம் பற்றி பேசும் வாய்ப்பு களைத் தினசரிகளுக்குள் உருவாக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் முதல் புத்தகத் திருவிழா நடைபெற்ற போது 'பள்ளிகளில் காலைக் கூட்டத்தின் தினமும் ஆசிரியர் உரையில் ஒரு புத்தகம் பற்றி பேச வேண்டும்' என ஒரு சுற்றறிக்கை வந்தது. ஆசிரியர்கள் அந்த 5 நிமிடத்திற்காக தயாரானார்கள்.

புத்தகத் திருவிழா நடைபெற்ற அந்த 12 நாட்களும் புத்தகம் பற்றிப் பேசுவதைக் குழந்தைகள் கேட்டார்கள். காலைக் கூட்டம் முடிந்து வகுப்பறையிலும் அது எதிரொலித்தது. தினமும் ஒரு மாணவரை நூலக வாசிப்பு அனுபவத்தைப் பேச வைப்பதாக அப்பழக்கம் தொடர்ந்தது. எதையும் மேலிருந்து சரி செய்வது எப்போதும் கடினம். கீழிலிருந்து கட்டி எழுப்பும் முயற்சிகளே நிரந்தர அடைவைத் தந்திருக்கின்றன.

மாற்றங்கள் மாணவரிடமிருந்து தொடங்குவதே சரி. ஆசிரியர்கள் வாசிக்கும் சூழல், தானே உருவாகும். வாசிப்பு சுதந்திரத்தைப் பாடநூல்களால் தரவே முடியாது. பிடித்ததை எடுத்துப் படிக்கும் படியான புத்தக வாய்ப்புகள் நம் வகுப்பறைச் சூழலில் இல்லை. அதற்கு பள்ளி நூலகம் தான் சரியான இடம். உள்ளூர் கிளை நூலகங்கள் அதனினும் சுதந்திரமானவை.

சரி, நம் பள்ளி நூலகங்களில் குழந்தைகளே வாசிக்கும் படியான சுவாரஸ்யமான வேடிக்கை யான கதைப் புத்தகங்கள் எவ்வளவு இருக்கின் றன? அருகாமை கிளை நூலகங்களில் குழந்தைகளுக்கான பிரிவு எப்படி இருக்கிறது? அங்கிருக் கும் நூல்கள் தற்காலத் தன்மையிலான புத்தகங்களா? பாடப் புத்தகங்களே வண்ணங்களில் இருக்கிறதே! நூலகத்தில் உள்ள கதைப் புத்தகங்களில் எத்தனை சதவீதம் வண்ணமயமானது?

சக.முத்துக்கண்ணன்
சக.முத்துக்கண்ணன்

தமிழில் பெரியவர்களுக்கான நூல்களோடு ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கான ஆக்கங்களேமிகவும் குறைவு. மேற்கத்திய மொழிகள் சிறார் பிரிவில் உள்ளடகத்திலும் வடிவமைப்பிலும் குறிப்பிட்ட அடைவைக் கொண்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம். அண்டை மாநிலமான கேரளாவில் நம்மைவிட முன்னேற்றங்களைக் காண்கிறோம்.

நூலகங்களில் குழந்தைகளுக்கான பிரிவில் இருக்கும் போதாமை அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டும். தற்காலத் தன்மையிலான வண்ண மயமான கதைப் புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் உருவாக்கவும், வழங்கப்பட வேண்டும்.

இன்று அரசு பள்ளிகளுக்கு வந்து சேர்ந் திருக்கும் தேன்சிட்டும் ஊஞ்சலும் நம்பிக்கை தரும் தொடக்கம். அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து நூலகங்களுக்கும் அவை வழங்கப்பட வேண்டும். இது வாசிப்பு பேசு பொருளாகியிருக்கும் காலம். களத்தில் குழந்தை கள் வாசிப்பதில் இருக்கும் பிரச்சினைகள் இன்னும் வெளிப் படையாகப் பேசப்பட வேண்டும். பேசுவோம்.

கட்டுரையாளர்

சிலேட்டுக்குச்சி & ரெட் இங்க் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in