புதுமை விரும்பும் மாணவர்களுக்கானது வானவில் மன்றம்

புதுமை விரும்பும் மாணவர்களுக்கானது வானவில் மன்றம்
Updated on
2 min read

சிறுவயதிலேயே தந்தையை இழந்த அந்த குழந்தை கல்வியையும் இழக்கிறது. வீட்டில் நடைபெறும் விவசாய வேலைகளில் உதவியாக இருக்கிறது. குழந்தை சிறுவனாகிறான். அவரது மாமா அவனுக்கு ஆதரவாக இருக்கிறார்.

விவசாயத்தில் விளையும் பொருட்களை வண்டியில் கொண்டு சென்று அருகிலுள்ள சந்தையில் விற்று வருவது அக்குடும்பத்தின் வாடிக்கையாகிறது. உடன் அந்த சிறுவனும் செல்கிறான். ஆனால், சந்தைவரை செல்வதில்லை. வழியிலேயே ஓரிடத்தில் இறங்கிவிடுகிறான்.

தொடர்ந்து இந்த சிறுவனை சந்தையில் சந்திக்க இயலாத மாமா ஒருநாள் இவன் என்னதான் செய்கிறான் என்று உற்றுநோக்குகிறார். மரங்களடர்ந்த பகுதியில் இறங்கிவிடும் சிறுவன் தமக்கு விருப்பமான புத்தகங்களை வாசித்துக்கொண்டிருப்பதைக் காண்கிறார். சிறுவனுக்கு கல்வியில் உள்ள ஆர்வத்தைப் புரிந்துகொள்ள அந்த சிறுவனின் கல்வி மீள்கிறது.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல. புவியீர்ப்பு விசை, நிறப்பிரிக்கை போன்ற ஆய்வுகளை மேற்கொண்ட சர் ஐசக் நியூட்டன். ஆம் பள்ளியை மீறி பல கண்கள் குழந்தைகளின் மேல் விழவேண்டிய தேவை உள்ளது. கரிசனமாக பார்ப்போர் எண்ணிக்கை உயர உயர அக்கறையின் அளவும் அதிகமாவது இயல்புதானே. இதுபோன்ற அக்கறை கொண்ட செயல்பாடாகவே தமிழ்நாடு அரசின் கல்வித்துறையின் வானவில் மன்றம் பரிணாமம் பெற்றுள்ளது.

மாணவர்கள் விரும்பி நுழையும் இடமாக பள்ளி கள் மாறுவது அவசர அவசியம். மாணவர்கள் பள்ளிகளை, வகுப்பறைகளை வெறுப்பதற்கான காரணங்களுள் முக்கியமான ஒன்று மதிப்பெண் ரீதியாக வெற்றி பெற இயலாதோரை பள்ளிகளும் சமூகமும் கொண்டாட முன்வருவதில்லை.

அதுபோலவே கூட்டாகச் செயல்பட்டு கற்பதற்கான சூழலும் பள்ளிகளில் அரிதாகவே வாய்க்கிறது. அவ்வாறு கூட்டாகச் செயல்படும்போது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பலமும் வெளிப்படும். இதன் மூலம் தன்னம்பிக்கை கூடும். இது எழுத்துத் தேர்வை மாணவர்கள் நம்பிக்கையுடன் அணுகவும் உதவும். மாணவர்கள் பெரும்பாலும் புதுமை விரும்பிகள். புதுப்புது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு சாதிக்கத் துடிப்பவர்கள்.

இதனையெல்லாம் கணக்கில் கொண்டுதான் தமிழக அரசின் கல்வித்துறை பள்ளிகளில் வானவில் மன்றங்களை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ”எங்கும் அறிவியல் யாவும் கணிதம்” என்ற நோக்கில் கற்றல் கற்பித்தலில் ஆரோக்கியமான மாற்றங்களைக் கூடுதலாக்க இது முயல்கிறது.

பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் மாதம் ஒரு முறை மட்டும் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவரிடையே அறிவியல் செயல்பாடுகளை செய்து காட்டுகின் றனர். அங்கு மாணவரிடமிருந்து அறிவுபூர்வமான கேள்விகளை தொகுக்கின்றனர். மேலும் தீராதஆர்வம் கொண்ட மாணவர்களையும் கண்டெடுக்கின்றனர்.

இவர்களுக்கு பல்வேறு கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு பல்வேறு ஆய்வுநிறுவனங்களுக்கும், அயல்நாட்டு சுற்றுலா செல்லும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தர உள்ளனர். ஆசிரியர்களின் உதவியோடு நடைபெறும் இச்செயல்பாடு மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது.

அறிவியல் கற்பித்தலில் கள அனுபவம் கொண்ட பல்வேறு கருத்தாளர்களும், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் பலரும் இந்த திட்டத்திற்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர். “பூமியில் செய்யப்படும் அறிவியல் சோதனைகளை நிலவில் சென்று செய்தால் இதே விளைவுதான் ஏற்படுமா? அக்கா நீங்க செய்த அதே சோதனையை நான் வேற மாதிரி செய்திருக்கேன் பாருங்க...” என முன்வரும் துவக்கப் பள்ளி குழந்தைகள்.

இவையெல்லாம் வானவில் மன்ற கருத்தாளர் களுக்கான அனுபவ பகிர்வில் காதில் விழுந்தவை. இந்த செயல்பாடுகளை பள்ளிகளில் பணியாற்றிவரும் அறிவியல் ஆசிரியர்களே செய்யலாம் என்ற கருத்தும் ஏற்புடையதே. அதற்கும்இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் ஆசிரியர்கள் இதேபோன்ற செயல்பாடுகளைச் செய்துபார்க்க உதவியாக அதற்கான நிதி உதவியினையும் கல்வித்துறை வழங்குகிறது. வாய்ப்புள்ள அனைவரும் அருகிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று இச்செயல்பாடுகளில் ஈடுபட்டு உற்சாகப்படுத்தலாம். யாருக்குத் தெரியும் உங்கள் கண்களுக்கு ஒரு நியூட்டன் தென்பட்டாலும் தென்படலாம்.

- கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்; தொடர்புக்கு:thulirmadhavan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in