குழந்தைகள்

குழந்தைகள்

Published on

வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி இன்றைய குழந்தைகள் கையாளப்படுவதில் பிரச்சினைகள் உள்ளதை பார்க்க முடிகிறது. குறிப்பாக மூன்று.

ஒன்று குழந்தைகளை சுதந்திரம் என்ற பெயரில் எந்த வித கட்டுப்பாடுமே இல்லாமல் அவிழ்த்து விடுவது. குழந்தைகளை கண்காணிப்பது என்பது சுலபமாக முடியாத காரியமாகும். சும்மா பெருமைக்காக வேண்டுமானால் கூறிக்கொள்ளலாமே ஒழிய, ஓரளவுக்கு கண்காணிக்கலாம்.

ஆனால், முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்றாகும். குழந்தைகளிடத்தில் தாங்கள் எந்நேரமும் கண்காணிக்கப்படுவது போன்ற ஒரு உணர்வை மட்டும் ஏற்படுத்த வேண்டும். இது, ஓரளவு அவர்களது தவறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உதவும். இந்த உணர்வு இல்லாத குழந்தைகள் முற்றிலும் பொறுப்பற்ற தன்மையை கொண்டதாகி விடும்.

இரண்டாவது குழந்தைகளை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறேன் என்ற பெயரில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது. நான் முன்னர் கூறியது போல, குழந்தைகள் பெரியவர்களை ஏமாற்ற வேண்டும் என முடிவெடுத்து விட்டால் அதை தடுக்க முடியாது.

தற்கால குழந்தைகள் பெரியவர்களை விட கெட்டிக்காரர்கள். முற்றிலுமாக கட்டுப்பாடுகளை விதிப்பது அவர்களை தவறாக வழிநடத்திவிடும். தனக்கு அனுமதிக்கப்படாத அனைத்தையும் ஒருங்கே அனுபவிக்க துடிக்கும் குழந்தை, நாம் நினைத்ததற்கு நேர்மாறாக முற்றிலுமாக வேறான தவறான பாதையில் சென்றுவிடும்.

மூன்றாவது பிரச்சினை குழந்தைகளை சமாளிக்க முடியாமல் சமாளிக்க முனைவதாக நினைத்துக்கொண்டு கரித்துக் கொட்டிக்கொண்டே இருப்பது. குழந்தைகள் கடுமையாக திட்டுவதையோ, வசைபாடுவதையோ கூட பொறுத்துக் கொள்வார்கள், ஏற்றும் கொள்வார்கள்.

ஆனால் கரித்துக் கொட்டுவது அவர்களுக்கு அந்த நபர் மீது கடுமையான வெறுப்பை ஏற்படுத்தி விடும். ‘நீ படிக்க மாட்டாய்', ‘உருப்பட மாட்டாய்!' ‘உனக்கு படிப்பு வராது!', ‘விளையாட்டு வராது!' போன்றவை. இது எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கி மனசுக்குள் வெறுப்பை விதைத்து விடும்.

நான்காவது குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் பெரியவர்களிடம் புறம் பேசுவது. குழந்தைகளைப் பற்றி குழந்தைகளிடம் புறம் பேசுவது போன்றவை. மற்றொன்று குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள், பெரியவர்கள் குறித்து மற்றொரு பெரியவர்களிடத்தில் புறம் பேசுவது.

ஐந்தாவது, குறிப்பாக பதின்ம வயது குழந்தைகள் ஆலோசனைகளை வெறுக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுபவர்களை விடவாழ்ந்து காட்டுபவர்களை மிகவும்பிடிக்கிறது. துடுக்கான குழந்தைகளை வாயாடி என்றோ, அதிகப்பிரசங்கி என்றோ புறம் பேசுவது மிக மிக கேவலமானது.

சுறுசுறுப்பான குழந்தைகள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்கிறார்கள். குழந்தைகளை கையாள்பவர்களுக்கு, அதுகுறித்த பயிற்சி அவசியமாகிறது. இதுகுறித்து அரசுகள் நிறைய யோசிக்க வேண்டும். நாட்டின் எதிர்கால வளங்கள் அவர்கள் என்பதால் யோசிப்பு அவசியம்.

- கட்டுரையாளர் ஆசிரியர் வணிகவியல் துறை எஸ்.ஆர்.வி.மேல்நிலைப்பள்ளி சமயபுரம்; திருச்சிராப்பள்ளி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in