பேனாவில் இருப்பது மை அல்ல சிந்தனை

பேனாவில் இருப்பது மை அல்ல சிந்தனை
Updated on
2 min read

யாருடைய மாணவன் என்ற கேள்விக்கு விடையானது வசிஷ்டரின் மாணவன் ராமன் என்பதே. அதில் ராமனை விட வசிஷ்டரே பெருமைக்குரியவர் ஆவார். குருவுக்கு உயர்ந்த இடம் இதிகாசத்தில் இதுவென்றால், தன் ஆசிரியரின் பெயரை இணைத்துக் கொண்ட அண்ணல் அம்பேத்கர், குடியரசுத் தலைவர் பதவியைவிட ஆசிரியர் பதவியை நேசித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆசிரியர் பணியினை உயர்ந்த இடத்தில் நிலை நிறுத்திச் சென்ற பெருமைக்குரியவர்கள்.

மாணவர்கள் என்பவர்கள் நிகழ்காலம் என்றால் அவர்களின் எதிரில் இருக்கும் ஆசிரியர்களே அவர்களின் எதிர்காலம். உங்களின் ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டுபவர்கள் ஆசிரி யர்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை ஆசிரியர் உங்களுக்குச் சொல்கிறார். நீ சிறந்த மாணவராக வருவதற்கும் உயர்ந்த மதிப்பெண்கள் பெறுவதற்கும் முழுக்க முழுக்க நீயே காரணம்.

உன்னுடைய உழைப்பும் முயற்சியும் பயிற்சியுமே உன் உயர்வுக்கு அடித்தளம். ஆசிரியரின் வழிகாட்டுதல் என்பது கல்வியில் ஓர் அங்கமே. அதையும் தாண்டி பாட நூல்கள், நல்ல நண்பர்கள், சிறந்த புத்தகங்கள் என பல வழிகாட்டிகளை தேர்வுசெய்து கற்றலுக்கான பயணத்தை தொடங்கும் போதும் தொடரும் போதும் உன் வாழ்வுக்கான இலக்கும், அதை அடைவதற்கான வழியும் தெரியும்.

சிகரங்களை நோக்கி: வாய்ப்புகளை பயன்படுத்துபவர்கள் சிகரங்களை நோக்கி செல்வார்கள். சிறந்தவர்களின் துணை யோடு சிகரத்தை அடைவார்கள். ஏணியும், தோனியும் என்றென்றும் பெருமைக்குரியது. அது அழிவில்லாதது. நிலையானது. அவற்றை பயன்படுத்துபவர்கள் மாறிக்கொண்டே இருந்தா லும் பின்னர் அவர்கள் அதனை மறந்து போனாலும் அவை தம் நிலையில் மாற்றம் இல்லாமல் தன் பணியை, கடமையை தவறாமல் செய்து வருகின்றன. உலகின் மாற்றங்களுக்காக அவை மாறாமல் இருக்கின்றன என்பதை மாணவர்கள் உணர்ந்தால் மட்டுமே போதும்.

எல்லாவற்றுக்கும் ஆசைப்படு: நீ ஆசைகளை வளர்த்துக்கொள். அது உன்னைஉயர்த்தும். நீ நல்ல மாணவன் என்ற நிலையை அடைந்து விட்டால் அடுத்து கவிஞனாக ஆசைப்படு. அடுத்து ஓவியனாக ஆசைப்படு. அடுத்துபாடகராக ஆசைப்படு. இப்படி அழியாத கலைகளை கற்று உன்னையும் உன் சமூகத்தையும் உயர்த்து. மாறாக அழியக்கூடிய பொருளின் மீதுஆசைப்படாதே. அது ஒருநாள் உன்னையும் உன்எதிர்காலத்தையும் அழித்து பொருளற்றதாக்கி விடும்.

கல்வி என்பது பாடநூல்களைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதி மதிப்பெண் பெறுவது அல்ல.படித்தவற்றையும் கேட்டவற் றையும் பயன்படுத்தி நம் நல் வாழ்விற்கு தேவை யானவற்றை பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியும், பயிற்சியுமே கல்வி.

கல்வி என்பதும், கற்றல் என்பதும் தேர்வு, பள்ளி, கல்லூரி என்பதையும் தாண்டி பார்ப்பதில், கேட்பதில் தொடங்கி சிந்திப்பதில், செயல்படுவதில் தொடர்வதை உணருங்கள். உங்கள் கைகளில் இருக்கும் பேனாக்களில் இருப்பவை 'மை' அல்ல, உங்கள் சிந்தனை என்பதை உணருங்கள்.

தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் பேனாக்களில் விடைகளை நிரப்பி எடுத்துச் செல்லுங்கள். நம்பிக்கை என்பதை தன்னம்பிக்கையாக மாற்றுங்கள். சிற்பி கருங்கல்லில் சிலைகளை வடித்து எடுப்பார். சிறந்த சிற்பிக்கோ கல்லுக்குள் இருக்கும் சிற்பம் கண்ணுக்குள் தெரியுமாம். அவர் சிலையை சுற்றியுள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு சிலையை வெளியில் கொண்டு வருவார்.

அதே போல் தான் தன்னம்பிக்கை உள்ள மாணவன் கைகளில் இருக்கும் பேனாக்களில் 'மை'க்கு பதிலாக விடைகள் இருக்கும். ஆம் பேனாவில் இருப்பது மை அல்ல விடைகள் என நம்புங்கள். வெற்றி பெறுங்கள். வெற்றி பெற உழைப்போம் உழைப்பினால் வெற்றி பெறுவோம்.

- கட்டுரையாளர்:கல்வியாளர் மயிலாடுதுறை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in