

திருச்சி மாவட்டம் சமயபுரம் எஸ்.ஆர்.வி. சி.பி.எஸ்இ பள்ளியின் ஒன்பதாம் வகுப்புதான் எங்களது வகுப்பறை. ஒருநாள் முதல் பாடவேளையில் எங்கள் வகுப்பறையின் சூழல் வழக்கம்போல் இல்லை. எங்களது வகுப்பாசிரியராகவும் தமிழாசிரியராகவும் பணியாற்றும் ஐயா அப்பாடவேளையில் புத்தகத்தில் இருக்கும் பாடத்தை எங்களுக்குக் கற்பிக்கவில்லை. மாறாக வாழ்க்கைப் பாடத்தைக் கற்பித்தார். மாணவர்களிடையே புகைந்து கொண்டிருந்த சண்டையும் சச்சரவும்தான் அதற்குக் காரணங்கள்.
அன்றைய தினத்தில் எங்கள் ஐயா வகுப்பறைக்குள் நுழையும்போது அவர் முகத்தில் ஆழ்ந்த யோசனையும் மனக்கவலையும் குடி கொண்டிருந்தது. ஒவ்வொரு மாணவரையும் எழுப்பி இந்த வகுப்பறையில் உனக்குப் பிடித்தவை, பிடிக்காதவை, உனக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து மனம் விட்டுப் பேசு என்று கூறினார். ஐயாவின் குரலில் இருந்த கண்டிப்பும் கனிவும் மாணவர்களை மனம் திறந்து பேசவைத்தன.
வகுப்பறையில் நிலவும் பிரச்சினைகள்: கலந்துரையாடலில் மாணவர்களின் மனதில் இருந்த கவலைகள் அத்த னையும் மடை திறந்தார்போல் வெளிவந்தன. மாணவர்களிடையே இருந்த சண்டை, வாக்குவாதம், சமமாக நடத்தாமை, ஏளனச்செயல், மதிப்பதில்லை போன்ற பல்வேறு பிரச்சினைகளை பலர் மனம் வெதும்பி கொட்டித் தீர்த்தார்கள். ஒட்டுமொத்த வகுப்பறையே ஒரு விவாத மேடையாக மாறியது.
பிரச்சினைகளுக்கான காரணங்கள்: அனைத்துப் பிரச்சனைகளுக்குமான காரணங்கள் மாணவர்களிடையே இருந்த புரிதலின்மை, அகங்காரம், ஆண்/பெண் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு மனப்பான்மை போன்றவைதாம் என்பதை தமிழ் ஐயா புரியவைத்தார். இவற்றை மாணவர்களாகிய நாங்கள் உணரத் தொடங்கியதும் எரிமலைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தன.
தணிந்தது சினம், மலர்ந்தன முகங்கள்: தமிழ் ஆசிரியரின் கம்பீரமான குரலில் கனிவான பேச்சில் அருள் நெறி கலந்த அறிவுறுத்தலில் பலரின் சினம் தணிந்தது. எங்களுடைய அறியாமையை எண்ணி வெட்கி தலைகுனிந்தோம். வேறுபட்டு நின்ற மனங்கள் ஒன்றுபட்டதை ஒட்டுமொத்த வகுப்பறையும் உணர்ந்தது. மாணவர்களின் அக கண்களைத் திறந்து ஒற்றுமைக்கு வழிவகுத்தது எங்கள் ஐயாவின் பேச்சும், அறிவுரையும்.
- கட்டுரையாளர்: 9ஆம் வகுப்பு மாணவி,எஸ்.ஆர்.வி. சி.பி.எஸ்இ பள்ளி, சமயபுரம்.