

15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - NILP. (2022 - 2027) என்கின்ற வயது வந்தோருக்கான புதிய கல்வி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இவர்களுக்கான பயிற்சி கையேடு தொலைநோக்கு பார்வையுடன் மிகச் சிறப்பான முறையில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
6 மாதங்கள் பயிற்சி: அதன்படி, தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். சுமார் 200 மணி நேரம் கற்பித்தல் நிகழும். பயிற்சி பெற்ற தன்னார்வலர்களைக் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிராமம், நகர் பகுதிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
15 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் முதல் கட்டமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். 2027-ம்ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்விகற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரை அடிப்படையில் வயது வந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் இப்பணி நடைபெற்ற வருகிறது. இது சார்ந்த விழிப்புணர்வு முகாம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் இன்னமும் 18 கோடியே 12 லட்சம் பெரியவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் அடிப்படை கல்வி அறிவு மற்றும் எண்ணியல் அறிவு மட்டுமின்றி 21-ம் நூற்றாண்டில் ஓர் குடிமகனுக்கு தேவையான முக்கியமான வாழ்க்கை திறன்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கூறுகளை அடங்கிய வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நூல் சிறப்புகள்: 140 பக்கங்கள் கொண்ட பயிற்சி நூலை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது. அழகிய படங்களுடன் வண்ணமயமாக தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சி கையேடு மனதை கொள்ளையடிக்கிறது. தமிழில் உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் சார்ந்து இடம்பெற்றுள்ளது.
கணித பாடத்தில் பூச்சியம், எண்கள் அறிவோம், ஓரிலக்க, ஈரிலக்க கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் டிஜிட்டல் எண்கள், வடிவங்கள், நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை, இடமதிப்பு உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்றுள்ளது.
உடல்நலம் காப்போம் பகுதியில், சரிவிகித உணவு, எளிய உடற்பயிற்சி முறைகள் மூச்சுப் பயிற்சி, கை கால் கண் பயிற்சி, புகை பிடித்தல் புகையிலை பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் விளக்கப்பட்டுள்ளது. அவசரகால தொலைபேசி எண்களும் இடம்பெற்றுள்ளன.
களப் பயணம்: இந்த ஆறு மாத கால பயிற்சியில் களப்பயணமாக வங்கி, அஞ்சலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களுக்கு நேரில் அழைத்துச் செல்லப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயனாளிகளுக்கான பயிற்சிக்கு கையேடு இன்றைய காலகட்டத்தில் சராசரி ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டிய பொது அறிவு சமூகம் சார்ந்த தகவல்களின் கூறுகளை உள்ளடக்கிய விதத்தில் அமைந்திருப்பது மிகச் சிறப்பு. எழுத்தறிவு இல்லாதவர்கள் மட்டுமல்ல எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இந்நூலை ஒருமுறை வாசிக்கலாம். முறையான கற்றல் கற்பித்தல் நிகழும் போது நல்லதொரு மாற்றம் மலரும்.
- கட்டுரையாளர் ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அய்யம்பாளையம், ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம்.