

புத்தக வாசிப்பு இன்றைய காலகட்டத்தில் முக்கியமான தேவை என்பதை கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர். இந்த சூழ்நிலையில் புத்தகத் திருவிழாக்கள் புத்தகங்களையும் மக்களையும் இணைக்கிற மகத்தான முயற்சியை தொடர்ந்து செய்து வருகின்றன. மற்றொருபுறம் குழந்தைகளுக்கான மூன்றாவது உலகம் குறித்து பலரும் பேசி வருகின்றனர்.
பள்ளிக்குள் நடந்த செயல்பாடுகள் பலவும் பள்ளிக்கு வெளியேயும் நடைபெறுகின்றன. பள்ளிக்கு வெளியே ஏற்படும் மாற்றங்கள் மூலமாக பள்ளிக்கு உள்ளேயும் மாற்றங்கள் நிகழும் என்கின்றனர் கல்வியாளர்கள். பள்ளிக்கு வெளியே மட்டும் மாற்றங்கள் நிகழ்ந்தால் போதாது, பள்ளிக்கு உள்ளேயும் மாற்றங்கள் நிகழ வேண்டும். அப்போதுதான் அது நீடித்த நிலைத்த மாற்றமாக இருக்கும்.
பள்ளிக்கு உள்ளே நிறைய மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் இன்றைய சூழலில் அவைகள் நடைமுறையில் இருக்கின் றனவா என்பதை ஆழமாக கவனிக்க வேண்டிய உள்ளது. உதாரணமாக அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் நிறைய கதைப் புத்தகங்கள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி திட்டத்தால் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆழமாக கவனிக்க வேண்டும்: அதைத் தாண்டி நூலகத்துக்கென நிறைய புத்தகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை யாவும் பள்ளிகளில் பத்திரமாய் இருக்கின்றன. இவை குழந்தைகளுக்கு பயன்படும் விதத்தில் பல செயல்பாடுகள் திட்டமிட வேண்டி உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்தமான புத்தகங்களை தேர்வு செய்வது என்பதும் குழந்தைகளே எடுத்து படிக்கும் அளவுக்கு குழந்தைகளை ஈர்க்கக் கூடியதாகவும் புத்தகங்கள் அமைவது அவசியம்.
அப்படியான புத்தகங்களை சிறார் எழுத்தாளர்கள் தற்போது நிறைய உருவாக்கி வருகின்றனர். அத்தகைய புத்தகங்கள் யாவும் குழந்தைகளை சென்றடைய வேண்டும். நிறைய கதை சொல்லிகள் குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகளை சொல்லி வருகின்றனர்.
புதிது புதிதான செயல்பாடுகள் வகுப்பறைக்கு தேவை. அத்தகைய செயல்பாடுகள் ஆசிரியர்கள் மத்தியில் உருவாக வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் புத்தகங்களை நேசிக்க வேண்டும். வாசிக்க வேண்டும். அதன் மூலமே ஒரு வாசிப்பு சமூகத்தை வகுப்பறைக்குள் உருவாக்க முடியும்.
ஆசிரியர்களே முன்னுதாரணம்: ஆசிரியர்கள் புத்தகங்களை வாசிக்காமல் குழந்தைகளை வாசிக்க வைப்பது என்பது சிரமம். எப்போதும் குழந்தைகளுக்கு ஆசிரியர்களே முன்னுதாரணம். ஆசிரியர்கள் மத்தியில் இதற்கான மிகப் பெரிய முன்னெடுப்பு தேவை. எனவே இந்த விஷயத்திலும் ஆசிரியரே முன்மாதிரியாக இருக்க வேண்டிய காலகட்டம் உருவாக்கியுள்ளது. ஆசிரியர்கள் புத்தகங்களை படிப்பவர்களாகவும் புத்தகங்களையும் குழந்தைகளையும் இணைக்கிற மிகப்பெரிய பாலமாகவும் உருவாக வேண்டியது அவசியம். அத்தகைய மாற்றத்தை தனித்தனி ஆசிரியர்களால் நிகழ்த்துவது என்பது சிரமம்.
இம்மாதிரியான செயல்பாடுகளை, பயிற்சியை ஏற்கெனவே வாசிப்பு முகாம் நடத்திய அனுபவங்களோடு உள்ளவர்களுடன் இணைந்து, கல்வித்துறை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர்கள் வாசிக்க உயிரோட்டமுள்ள முகாம் தேவை தான். ஆனால் அதுவும் பயிற்சி போல மாறிவிடக் கூடாது. அவ்வாறு வழங்குவதன் மூலம் மட்டுமே வகுப்பறைக்குள் மாற்றங்கள் நிகழும். அத்தகையை மாற்றத்தை நோக்கி கல்வித்துறை பயணிப்பது அவசியம்.
ஆசிரியர்களுக்கான வாசிப்பு முகாம்கள் இக்காலகட்டத்தில் கல்வித்துறையால் வழங்கப்பட வேண்டும். வகுப்பறைக்குள் ஏற்படும் மாற்றங்கள் சமூகத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.
கட்டுரையாளர்
தலைமையாசிரியர்
அரசு உதவிபெறும் ஆர்.சி.தொடக்கப் பள்ளி
மணியம்பட்டி, விருதுநகர் மாவட்டம்.