

செம்மொழிக்கு இப்போது வயது நான்கு.எல். கே.ஜி.யில் படிக்கிறாள். நானும் அவளும்அவளின் பெரியப்பாவின் இல்லத்திற்கு அவ்வப்போது செல்வோம். அப்போதெல்லாம் தனது விளையாட்டுப் பொம்மைகள், மாற்று உடைகள், சிற்றுண்டிகள் அடங்கிய மஞ்சள் பையை தானே தூக்கிக்கொண்டு முதல் மாடியில் இருக்கும் வீட்டிற்கு செம்மொழி ஏறிச் செல்வாள். செருப்பைக் கழற்றி உரிய இடத்தில் விட்ட அடுத்த நிமிடமே, அப்பா மணியை நான் அடிக்கிறேன் தூக்குங்கள் என்று சொல்லி காலிங் பெல்லை தானே அடிப்பாள்.
குழந்தை ஒவ்வொன்றையும் இப்போதுதான் புதிதாகப் பார்க்கிறாள், கற்றுக்கொள்கிறாள். நாங்களும் அவளுக்கு ஒவ்வொன்றையும் சுயம் சார்ந்து கற்றுக்கொடுக்கிறோம். ஒரு நாள் முதல் மாடிக்குப் படியேறியவள், அப்பா இது என்னப்பா என்றுமுதல் மாடியின் பால்கனியின் தடுப்புச் சுவரில் வெயில்படும் இடத்தில் செய்து வைக்கப்பட்டிருந்த களிமண் வண்டியைக் கை நீட்டி கேட்டாள்.
அகம் மகிழவைத்த மண்: இதுமா களிமண் வண்டிமா? என்று சொன்னதும் விரலால் ஈரம் காயாமல் இருக்கின்ற வெய்யிலில் காய்ந்து கொண்டிருக்கும் வண்டியின் பாகங்களை முதன் முதலாக விரலால் அழுத்திப் பார்த்தாள். புன்னகை செய்தாள். அகம் மகிழ முகம் மலர்ந்து சிரித்தாள்.
வீட்டிற்குள் ஓடி அவள் பெரியம்மாவையும் அக்காவையும் அழைத்துவந்து காட்டினாள். சித்தப்பாஎனக்கு ஸ்கூல்ல புராஜெக்ட் செய்ய சொன்னாங்கஅதுக்காக செஞ்சேன் என செம்மொழியின் அக்காள் பிரஹாசினி என்னிடம் கூறினாள். இதற்கிடையில் தனக்கு இந்தக் களிமண் வண்டி வேண்டும் என அழத் தொடங்கிவிட்டாள் செம்மொழி.
இவளின் அழுகையைக் கேட்ட அவளின் பெரியப்பா உள்ளிருந்து எழுந்து வந்து செம்மொழி அழாத பாப்பா அது வெய்யிலில் நல்லா காயட்டும்... காய்ந்ததும் எடுத்து விளையாடலாம் என்று சமாதானப்படுத்தினார்.
இல்ல பெரியப்பா எனக்குக் களிமண் வேணும்பெரியப்பா என்று அழுது கொண்டே சொன்னதும் அவளின் பெரியம்மா வீட்டிற்குள் சென்று பிளாஸ்டிக் வாளியில் வண்டி செய்தது போகமீதம் இருந்த களிமண்ணை எடுத்து வந்தார். செம்மொழி, இதோ உனக்கு எடுத்து வச்சிருக்கேன் பாருமா என்று வாளியைக்காட்ட மகிழ்வோடு ஓடி முதன் முதலாகக் களிமண்ணைத் தன் பிஞ்சுக் கைகளால் அள்ளி எடுத்தாள். எய்... எய்... வீட்டுக்குள் இரைக்காத என அவளது தாய் கூற வாவா வெளியே போய் விளையாடலாம் எனக் களிமண் வாளியோடு வெளியே எடுத்து வருகிறார்கள்.
அந்த களிமண் இதுவல்ல! - கிராமத்திலிருந்து நகரம் வந்த பத்தாண்டுகளுக்குப் பின் நானும் இப்போது களிமண்ணைப் பார்த்து மகிழ்கிறேன். சிறுவயதில் இந்தக் களிமண்ணோடு கழித்த காலங்கள் நினைவில் நிழலாடுகிறது. நானும் கையில் களிமண்ணை எடுத்துப்பார்க்கிறேன். களிமண்ணில் கூட அத்தனை மாற்றம். இந்தக் களிமண் நான் இளமைக்காலத்தில் தொட்டு விளையாடிய களிமண் போல இல்லை என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
இப்போது செம்மொழியின் கையில் இருக்கும் களிமண் கருமையான நிறத்தில் களிமண்ணும் மணலும் கலந்ததுபோல இருக்கிறது. அவள் கையில் வைத்து விளையாடுவதற்கான ஈரத்தன்மை இல்லாமல் காய்ந்து, கெட்டித்தன்மையோடு இருக்கிறது. அந்த களிமண்ணை செம்மொழியின் மென்மையான கரங்கள் பிசைவதற்கு ஏற்றப் பக்குவத்தில் தண்ணீரைக் கலந்து கொடுத்தேன்.
களி மண்ணைப் பிசைந்து கைகளில் வைத்துத் தட்டி ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். தட்டையாகத் தட்டி நடுவில் சற்றுக் குழியாக மாற்றி தட்டையாகவும் இல்லாமல் குழியாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவத்தைச் செய்து எடுத்துவந்து, அப்பா சட்டி செய்துட்டேன் எனக் காட்டி சிரித்தாள்.
துடைப்பத்தின் குச்சிகளை உடைத்து அதன் ஓர விளிம்புகளில் சுற்றிக் குத்தி விளையாடத் தொடங்கினாள். நானும் அவள் செய்த சட்டியை வைத்து விளையாடுவற்கு களிமண் அடுப்பு செய்துஅவளின் கையில் கொடுத்தேன். அதை வாங்கி தன்உள்ளங்கையில் வைத்து விளையாடி மகிழ்ந்தாள்.
‘சைனா க்ளே’ என்கிற நவீன கார்ப்பரேட் தயாரித்தகளி மண்ணை கையில் வைத்து விளையாடிய செம்மொழியின் கையில் தாய்மண் வளைந்து நெளிந்து வடிவமாகிக் கொண்டிருக்கிறது. செம்மொழிக்கு சுயம் என்பது களி மண்ணிலிருந்து தொடங்கி இருக்கிறது.
கட்டுரையாளர்: தமிழாசிரியர், எஸ்.ஆர்.வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, சமயபுரம்.