Published : 01 Feb 2023 06:15 AM
Last Updated : 01 Feb 2023 06:15 AM

மெல்ல கரைகிறேன்

கி. அமுதா செல்வி

என்னதான் புதுமையாக யோசிச்சாலும் மாற்றங்களை விரும்பினாலும் ஆசிரியர் முதலாளித்துவ புத்தி நம்மை அறியாமலே பல நேரங்களில் வெளிப்பட்டு விடுகிறது. இந்த ஆண்டான் அடிமை மனோபாவம் என்ற தடுப்பு தகர்க்கப்படும் போதுதான் மெல்ல மலர்கிறது ஆசிரியர் மாணவர் நல்லுறவு. இந்த உறவு வலுப்பெற்று நீட்டிக்கப்படும் போது உயிர் பெறுகிறது நல்ல உரையாடல்கள்.

நான் மணிக்கணக்கில் நீட்டி முழக்கும் இற்றுப்போன வரலாற்று சம்பவங்களைவிட இந்தஉரையாடல்களை மிக அவசியமானதாக கருது கிறேன். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உறவை வலுப்படுத்தும் சம்பவங்கள் சில நேரங்களில் நாமாக அமைக்க முயற்சி செய்ய வேண்டும். சில தருணங்களில் அதுவாகவே அமையும்.

வரலாறு என்று ஆரம்பித்தாலே வாய் மூடி கொள்கிறார்கள். பாடம் அவர்களை வாய் மூடிய மௌனிகளாக உட்காரச் செய்கிறது. நான் பல நேரங்களில் பேசிப் பேசிபார்த்து பதில் வராமல் ஏதாவது பேசுங்கடா என்று கூறி தவித்துப் போய் அமர்ந்து விடுகிறேன். உரையாடல்கள் எங்கிருந்து தொடங்குவது என்பதில் பெரும் சிக்கல்கள் இருக்கிறது.

பாடப் புத்தகம் தாண்டி: பாடப் புத்தகம் தாண்டி எதையாவது வாசியுங்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் மாறுதல் சிலரிடமே தென்படும். பாடம் நடத்தி முடிக்கும்போது குழந்தைகள் புதிய தேடலுக்குள் செல்ல வேண்டும் என்று ஆசை கொண்டு தான் ஒவ்வொரு நாளும் வகுப்பறைக்குள் செல்கிறேன். அதுபோன்ற மாற்றம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறிய அளவிலேயே காண முடிகின்றது. நாம் நினைக்கும் மாற்றங்கள் எல்லாம் நினைத்த வேகத்தில் நடப்பதில்லை.

பாடப் புத்தகங்களை தாண்டிய வாசிப்பு மிக அவசியம் என்று தினமும் சொன்னாலும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு வாசிப்பின் தாகத்தை பரவச் செய்ய இயலவில்லை என்பது தான் உண்மை நிலை. நீங்கள் வாசிக்காவிட்டால் என்ன? பரவாயில்லை நான் வாசிக்கிறேன் நீங்கள் கேளுங்கள் என்று தொடங்கியதுதான் "உரக்க வாசிப்போம் உரையாட தொடங்குவோம்" என்ற செயல்பாடு.

வாரம் ஒரு பாடவேளை ஒரு சிறிய புத்தகமோ அல்லது ஒரு கதையோ வாசிக்க வேண்டும். ஆரம்பத்தில் நானே வாசித்தேன். தொடக்கத்தில் சிறுசிறு சலசலப்பு இருந்தது. சிறிதுநேரத்திற்கு பிறகு வகுப்பின் அத்தனை கவனம் கொஞ்சம் என் கதைகளின் பக்கம் சாய்ந்தது. காதுகள் கூர்மையானது. ஆழ்ந்து கவனித்தது. சிறார் எழுத்தாளர்கள் உதயசங்கர், விழியன் கதைகள் துணை நின்றன.

"அக்கா இந்த வாரம் என்ன கதை" என்று ஆர்வமாய் கேட்கும் சூழல் ஏற்பட்டது.

கருத்து சொல்லும் கயிறு கதை: அன்று புத்தகத்துடன் ஒன்பதாம் வகுப்பிற்குள் சென்றேன். விஷ்ணுபுரம் சரவணனின் கயிறுகதையை வாசிக்கத் தொடங்கினேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் மிகுந்த தயக்கம் இல்லை, பயத்துடன் தான் அந்த கதையை வாசித்தேன். "செழியனும் அம்பேத்கரும் நண்பர்கள்" என்று வாசித்துக் கொண்டிருக்கும் போது "டேய்" என்ற பெருங்குரல் என்னை அரட்டி திடுக்கிடச் செய்தது. வாசிப்பதை நிறுத்தி நிமிர்ந்து பார்த்தேன். "ஒன்றுமில்லை அக்கா வெளில ஒரு சுல்லான். நீங்க தொடர்ந்து வாசிங்கக்கா" என்றான் ஒருவன்.

உள்ளுக்குள் சிறு நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஜாதி கயிறு கட்டக்கூடாது. ஜாதியால் பிரிக்க நினைக்கும் சதிகாரர்கள் இனம் கண்டு வெளிப்படையாய் எதிர்ப்போம் என்ற கருத்தை மறைபொருளாக சொல்லும் கயிறு கதை முடிந்தது. பெருத்த மவுனம் நிலவியது. சொல்லுங்க என்ன புரிந்தது என்றதும் ஆரம்பமானது அற்புதமான உரையாடல்.

நான் பேச தயங்கியதை வெளிப்படையாய் போட்டு உடைத்து பேசி அமர்ந்தான் ஒரு மாணவன். ஒருவர் தொட்டு ஒருவர் உரையாடல் நீண்டது. இப்படிப்பட்ட உரையாடல் நிகழும் என் வகுப்பறையில் நான் மெல்ல கரைகிறேன். அந்த நேரங்களில் எல்லாம் ஆண்டான் அடிமை மனோபாவம் தெரியாமல்கூட என் வகுப்பில் எட்டிப் பார்ப்பதே இல்லை.

- கட்டுரையாளர்: பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, குலமங்கலம், மதுரை மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x