

இறக்கைகள் இன்றி நாம் வானில் பறந்தால் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்போம். கற்பனை செய்து பார்க்கும் போதே நம் மனம் அலாதியான இன்பம் அடைகிறது அல்லவா!
இதே அளவு இன்பத்தை ஆசிரியரான நான் என் மழலையர்களுக்கு அளிக்க முடியும். ஒரே ஒரு ஸ்டார் ஸ்டிக்கர் (star sticker) கொடுத்தால் போதும். அந்த ஸ்டார் ஸ்டிக்கரை பெற்றவுடன் அவர்களின் முக மலர்ச்சியை வருணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. அவர்களின் முகத்தில் அப்படிப்பட்ட ஓர் பேரின்பம் தோன்றும். மிகவும் உத்வேகத்துடன் மற்ற செயல்களைக் கற்பதற்குப் புத்துணர்ச்சியாக தயராகிவிடுவார்கள்.
ஆரம்பத்தில் ஸ்டார் ஸ்டிக்கர் கொடுக்கும் போது எவ்வளவு ஆர்வம் காட்டினார்களோ, அதே அளவு ஆர்வத்தை இன்றுவரை அவர்களிடம் என்னால் கண்டுணர முடிகிறது.
அடுத்தடுத்த ஸ்டார் ஸ்டிக்கர் பெறப்போகும் குறிக்கோளோடு முனைப்புடன் செயல்படுவார்கள்.
எனவே, மழலையர் விரும்புவது அவர்களின் செயலுக்கான உடனுக்குடனான அங்கீகாரம் என்பதை உணர்ந்து கொண்டு செயலாற்றத் தொடங்கினேன்.
ஒரு ஸ்டார் ஸ்டிக்கர் கொடுத்தால், கற்றலில் கவனக் குறைவு உள்ள குழந்தைகளும் ஒருபடி முன்னேற முயற்சிப்பார்கள்.
சுட்டித் தனம் செய்யும் குழந்தைகளும் அமைதியாக வகுப்பறையில் அமர்வார்கள். சாப்பிடமாட்டேன் என அழும் குழந்தைகளும் அழகாகச் சாப்பிட்டு முடிப்பார்கள்.
நமக்கு வேண்டுமானால் அது ஒரு சாதாரணமான ஸ்டார் ஸ்டிக்கராக இருக்கலாம். ஆனால், அந்த மழலையர்களுக்கு, ஆசிரியரிடமிருந்து அங்கீகரித்து அளிக்கப்பட்ட ஒரு பரிசு அல்லது அன்பளிப்பு என்று கூறிக் கொண்டே போகலாம்.
தாங்கள் பெற்ற ஸ்டார் ஸ்டிக்கரை அவர்கள் பாதுகாக்கும் விதம், ஒரு தனியழகு. தங்கள் நோட்டுகளில், ஐடி கார்டுகளில் சிலர் ஒருபடி மேலே சென்று தனது வீட்டுச் சுவர்களில் ஒட்டிவைத்துக் கொண்டு தினமும் பார்த்து மகிழ்வார்கள். இந்த ஸ்டார் ஸ்டிக்கரினால் எனக்கும் என் மழலையர்களுக்கும் இடையே ஒரு வலுவான நட்புறவு ஏற்பட்டது.
ஒரு நாள் பள்ளிக்கு நான் விடுப்பு எடுத்தபோது என்னிடம் பயிலும் ஒரு மழலை "என் ஆசிரியர் வரவில்லை" என அழுதான் என்ற செய்தி மறுநாள் என்னை வந்தடைந்தது.
எனவே, ஸ்டார் ஸ்டிக்கரின் மீது இருந்த ஆர்வம் மெல்ல மெல்ல, என் மீதும் பரவி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். சிறு வயது குழந்தைகள் முதல் முதியவர் என அனைவரின் மனமும் தன்னை அங்கீகரிக்கும் நபரையும் சூழலையும் விரும்புவார்கள் என்பதை என் வகுப்பறை சூழல் உணர்த்தியது.
சிறு விஷயங்களுக்கும் நாம் குழந்தைகளை அங்கீகரித்து பாராட்டுவதன் மூலம் செயலளவிலும் மனதளவிலும் அதிவேகமாக முன்னேற்றமடைவார்கள் என்பதை நான் மழலையர்களுக்கு வழங்கும் ஒவ்வொரு ஸ்டார் ஸ்டிக்கரும் மின்னி மின்னி சொல்லும். அங்கீகரிப்பதும் அங்கீகாரம் பெறுவதும் வெற்றியின் அடையாளங்கள்.
கட்டுரையாளர் மழலையர் ஆசிரியர் எஸ்.ஆர்.வி.சீனியர் செகன்டரிபப்ளிக் பள்ளி. சமயபுரம், திருச்சி.