

இந்தியாவின் ஆகச் சிறந்த அடையாளம் எது? ஐயம் வேண்டாம். ‘இந்திய சாசனம்’ அதாவது, நமது அரசமைப்பு சட்டம். இதுவே நம் அனைவருக்கும் பொதுவான அடையாளம் ஆகும். இந்த சாசனம் நமக்கு அப்படி என்னதான் தந்து விட்டது?
பெருமையுடன் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்வதற்கான ‘அடிப்படை உரிமைகள்’ நமது சாசனம் நம் ‘அத்தனை பேருக்கும் ஒன்றாய்’ வழங்கியுள்ள விலை மதிப்பற்ற வாழ்வாதாரம், வாழ்நாள் கொடை. சாசனத்தின் பாகம் மூன்று – பிரிவு 12 முதல் 35 வரை‘அடிப்படை உரிமைகள்’ குறித்துப் பேசுகிறது. இவற்றுள், மிக முக்கியமான சில உரிமைகளை மட்டும் பார்ப்போம்.
இந்தியாவில் வாழும் அனைவரும்
சட்டத்தின் முன் எல்லோரும் சமம் அல்லது சட்டத்தின் சமமான பாதுகாப்பு என்கிற உரிமையை இந்திய எல்லைக்குள் எந்த நபருக்கும் அரசாங்கம் மறுக்காது என்கிறது சாசனத்தின் பிரிவு 14. கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு, இந்தப் பிரிவின் கீழான உரிமை, இந்தியக் குடிமக்கள் மட்டுமல்ல; இந்தியாவுக்குள் இருக்கும் எல்லா நபர்களுக்கும் பொருந்தும்.
அதாவது, நமது நாட்டுக்கு வந்துள்ள அல்லது இங்கு தங்கி வசிக்கிற வெளி நாட்டவருக்கும் சட்டத்தின் முன் சமம் என்கிற உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமகன், வெளி நாட்டவர் இடையே ஒரு வழக்கு என்று வந்து, நீதிமன்றத்துக்குப் போனால், சட்டத்தின் முன்பு இருவரும் சமமாகவே நடத்தப்படுவார்கள். இந்தியக் குடிமகன் என்று சொல்லி யாரும் ‘ஆதாயம்’ பெற முடியாது.
இதைப் போலவேதான், பிரிவு 21 வழங்கும் ‘வாழ்வதற்கான சுதந்திரம்’ மற்றும் ‘தனி நபர் சுதந்திரம்’ என்கிற உரிமையும் எல்லா மனிதருக்கும் பொதுவானது. நமது சாசனம் எந்தஅளவுக்கு நியாயமானது, நடுநிலை யானது என்பது புரிகிறதா?
சிறப்பு ஏற்பாடுகள்
மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த ஊர், அல்லது வேறு எந்த அடிப்படையிலும் குடிமக்களிடையே அரசாங்கம் பாகுபாடு காட்டாதுஎன்கிறது பிரிவு 15. அரசுப் பணிகளில் எல்லாக் குடிமகன்களுக்கும் சமவாய்ப்பு நல்குவதை உறுதி செய்கிறது பிரிவு 16. ஆனாலும் சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் பொருட்டு, சிறப்பு ஏற்பாடுகளை அரசுகள் மேற்கொள்ளலாம். இந்தப் பிரிவின் உட்பிரிவு 16(4) இதற்கு வழி கோலுகிறது. ‘சமம் அற்றவர்கள் சமமாக நடத்தப்படக் கூடாது’ என்கிற உயரிய நீதியின் வெளிப்பாடு இது. பாராட்டத் தோன்றுகிறது அல்லவா? இதுதான் நாம் உயர்த்திப் பிடிக்கும் சாசனத்தின் தனிச் சிறப்பு.
தீண்டாமை பெருங்குற்றம்
தீண்டாமைக் கொடுமையை முற்றிலுமாகத் தடை செய்கிறது பிரிவு 17. யாரும் எந்த வடிவில் தீண்டாமையைக் கடைப்பிடித்தாலும் அவர்கள், சட்டத்தால் தண்டனைக்கு உரிய குற்றவாளிகள் ஆவர். இதனையே விடுதலைக்கு முன்பாக மகாத்மா காந்தி, ‘தீண்டாமை என்பதுமனித குலத்துக்கு எதிரான மாபாதகக் குற்றம்’ என்று கடுமையாக சாடினார்.
பேச்சும் கருத்தும்
‘சுதந்திரத்துக்கான உரிமை’ வழங்கும் பிரிவு 19 மிக முக்கியமானது. பேச்சுரிமை, கருத்துரிமை, ஆயுதங்கள் இன்றி அமைதியாகக் கூடும் உரிமை, சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை, இந்திய எல்லைக்குள் எங்கும் சென்றுவர, தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வசிக்க உரிமை, சட்டத்துக்கு உட்பட்ட எந்தத் தொழிலையும் நடத்துவதற்கான உரிமை என்று பல அடிப்படை உரிமைகளை வழங்குகிறது இந்தப் பிரிவு.
ஆனாலும், இவற்றை நாம் பொறுப்புடன் கையாள வேண்டும் என்பதற்காக சில நியாயமான கட்டுப்பாடுகளை இதன் உட்பிரிவுகள் வலியுறுத்துகின்றன. ‘கட்டுப்பாடற்ற சுதந்திரம்’ மிகவும் ஆபத்தானது என்பதை நமக்கு உணர்த்தவே இந்த ஏற்பாடு. நமது சுதந்திரம் பிறருக்கு பிரச்சினையாக இருத்தல் கூடாது. சரிதானே!
இலவச கல்வி உரிமை
ஒரே குற்றத்துக்காக ஒருவரை, இரண்டு முறை தண்டித்தல் கூடாது; ஒருவரின் வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியாகப் பயன்படுத்தி தண்டித்தல் கூடாது என்கிறது பிரிவு 20. தனிநபர் உரிமையை உறுதி செய்யும் பிரிவு 21-ல் சேர்க்கப்பட்டது. பிரிவு 21ஏ இதன் வழியே, 14 வயதுக்கு உட்பட்ட எல்லா சிறுவர்க்கும் அரசு, கட்டாய இலவசக் கல்வி வழங்கும் என்று பிரகடனப்படுத்துகிறது சாசனம். அருமை அல்லவா?
சட்ட உதவி பெறலாம்
கைது நடவடிக்கைக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது பிரிவு 22. தகுந்த காரணம் சொல்லப் படாமல் யாரையும் கைது செய்தல் கூடாது; கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்கு உள்ளாக, நீதிபதியின் முன்பாக அந்தக் கைதி நிறுத்தப்பட வேண்டும்; அவருக்குத் தேவையான சட்ட உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகிறது இந்தப் பிரிவு.
குழந்தை தொழிலாளர்முறை குற்றம்
மனிதர்களைக் கடத்துவதற்குத் தடை (பி. 23) குழந்தைத் தொழிலாளரைப் பணியமர்த்த தடை (பி.24) ஆகியன, சுரண்டலுக்கு எதி ராக சாசனம் தரும் உரிமைகள் ஆகும். மத சுதந்திரத்தைக் காக்கும் வகையில் சிறுபான்மையினரின் செயல்பாடுகள், அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அடிப்படை உரிமைப் பட்டியலில் இடம் தந்து ஊக்குவிக்கிறது பிரிவு 30.
உரிமைகளை காக்கும் உரிமை
பாகம் மூன்றில் சாசனம் கூறும் அடிப்படை உரிமைகளைக் குறைக்க அல்லது பறிக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் நமது சாசனம் பரிந்துரைக்கும் நெறிமுறைகளுக்கு எதிரானது. இத்தகைய முயற்சிகள் எதையும் உச்ச நீதிமன்றம் கடுமையாக எதிர்த்து மேற்கொண்டு செயல்பட முடியாமல் தடுத்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது.
அது சரி… அடிப்படை உரிமைகள் குறித்துப் பெருமைப்படுகிறோமே, நமக்கென்று ‘அடிப்படைக் கடமை கள்’ இருக்கின்றனவே… சரியாக நிறைவேற்றுகிறோமா?
- தொகுப்பு: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி