

உலக நாடுகளின் அரசமைப்பு சட்டங்களில் அடித்தட்டு மக்களுக்கு நேரடிப் பயன் தருவதாக அமைந்துள்ளது இந்திய சாசனம். இந்தியாவுக்கான அரசியல் நிர்ணய சபை நிறுவப்பட வேண்டும் என்கிற யோசனையை இந்திய இடதுசாரி இயக்கங்களின் முன்னோடியானஎம்.என்.ராய், 1934-ம்ஆண்டிலேயே முன் மொழிந்தார்.
இதனை ஏற்று இந்திய தேசிய காங்கிரஸ்,1935-ல் லக்னோ மாநாட்டில், அரசியல் நிர்ணய சபை கோரிக்கையை முன் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 1939 நவம்பரில் ராஜாஜி, நிர்ணய சபைக்கானவேண்டுகோள்விடுத்தார். 1940 ஆகஸ்ட்டில் ஆங்கிலேய அரசு இதனை ஏற்றுக் கொண்டது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்,அரசியல் நிர்ணய சபையின் தலைவர்ஆனார்.
குடிமைப் பணியில் இருந்தசட்ட வல்லுநர் பி.என். ராய் நிர்ணயசபையின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர், உலக நாடுகளின் சட்டங்களை ஆழமாகப் படித்து அவற்றின் சிறப்பம்சங்களை உள்ளடக்கிய, சாசனத்துக்கான தொடக்க நிலை வழிகாட்டுக் குறிப்புகள் வழங்கினார்.
அரசமைப்பு சட்டத்தின் தந்தை
நமது நாட்டுக்கு ஏற்ற சாசனத்தை வடிவமைக்க வரைவுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் தலைவராக இருந்து, உலகின் மிகச் சிறந்த, அதி அற்புதமான சாசனத்தை நமக்குவடிவமைத்து தந்தவர் அடித்தட்டு மக்களின் வேதனைகளை, தேவைகளை நன்கு உணர்ந்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர். அண்ணலின் சிந்தனையும் செயலும் போற்றுதற்கு உரியன; நமது சாசனத்தை வடிவமைத்ததில் அன்னாரின் பங்களிப்பு அளப்பரியது. இதனால் இவரை நாம் ‘அரசமைப்பு சட்டத்தின் தந்தை’ என்று புகழ்கிறோம்.
அண்ணல் அம்பேத்கர் தலைமை வகித்த வரைவுக் குழுவில், கே.எம். முன்ஷி, முகமது சாதுல்லா, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கோபால்சாமி ஐயங்கார் மற்றும் (இடையில் இணைந்த) என். மாதவராவ், டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகிய உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 டிச 9 அன்று புது டெல்லியில் நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக செயல்பட்டது. 1950 ஜனவரி 24 கூட்டத்துடன் நிர்ணய சபையின் பணி நிறைவுற்றது.
சமயசார்பற்ற நாடு என்றால்?
இந்திய சாசனம், முகப்புரை, 22 பாகங்களில் 395 பிரிவுகள், அட்ட வணைகள் – 12 ஆகிய முக்கிய பாகங்கள் கொண்டது. 1949 நவம்பர் 26 அன்று அரசியல் நிர்ணய சபையில் இந்திய சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சாசனத்தின் சில பிரிவுகள் அன்றே நடைமுறைக்கு வந்து விட்டன. இதனால் நவ 26 சாசன நாளாக கொண்டாடப்படுகிறது.
இரண்டு மாதங்கள் கழித்து, 1950 ஜனவரி 26 அன்று சாசனத்தின் அத்தனை பிரிவுகளும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததே குடியரசு தினம். இந்தியா இறையாண்மை கொண்ட, சோசலிச, சமயசார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடு என்கிறது முகப்புரை. எந்தவொரு நாட்டுக்கும் அடிபணியாது, நமக்கான கொள்கைகளை நாமே சுயமாக நிர்ணயித்துக் கொள்கிற உரிமையே இறையாண்மை ஆகும்.
எல்லாருக்கும் எல்லாமும் என்கிற உயரிய கோட்பாட்டையே சோசலிசம் என்கிறோம். இந்த திசையில்தான் நமது நாடு பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சாசனத்தின் முகப்புரை. அரசும் சட்டமும், எல்லா மதங்களுக்கும் பொதுவாக இருந்து, எல்லா மதங்களையும் சமமாக மதிப் பதைத்தான் சமயசார்பற்ற என்று குறிப்பிடுகிறது.
பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் நடைபெறும் ஆட்சி முறையே ஜனநாயகம் எனப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் அரசு, ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்கலாம். அதன் பிறகு மீண்டும் பொதுத் தேர்தல் மூலம் புதிய அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதுவே சாசனம் கூறும் ஜனநாயக நடைமுறை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, குறிப்பாய் சாசனம் வலியுறுத் தும் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு ஆட்சி புரிய வேண்டும். சட்டத்தின் மாட்சிமையை உறுதி செய்யும் சட்டத் தின் ஆட்சி என்பதையே குடியரசு என்கிறோம்.
நமது சானத்தின் முகப்புரை நான்கு முக்கிய கோட்பாடுகளை முன் வைக்கிறது. அவை: நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.
நீதியில் மூன்று வகைகள் - சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி.
சுதந்திரம் - கருத்து சுதந்திரம், அதனை வெளிப்படுத்தும் சுதந்திரம், ‘நம்பிக்கை’ சுதந்திரம், மத சுதந்திரம், வழிபாட்டு சுதந்திரம் என்று ஐந்து வகைகள் கொண்டது.
சமத்துவம் - தகுதி நிலை மற்றும் வாய்ப்புகளில் சமத்துவம்.
சகோதரத்துவம் – தனி மனிதரின் கண்ணியம், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப் படுத்தும் சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது சாசனம்.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்தியக் குடிமக்கள் ஆவர். இரட்டைக் குடியுரிமையை சாசனம் அங்கீகரிக்கவில்லை. அதாவது இங்கு பிறக்காத அயல் நாட்டுக் குடிமகன் யாரும், இங்கும் ஒரு குடிமகனாக, இரு நாட்டுக் குடிமகன் ஆக முடியாது.
‘மக்கள் நல அரசு’ அமைவதையே சாசனம் பரிந்துரைக்கிறது. அதாவது சாதாரணரின் நலனே அரசுகளின் முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டும் என்கிறது. இதன் அடிப்படையிலேயே, இந்திய சாசனம், சிறந்ததாக போற்றப்படுகிறது. இவ்வாறு வடிவமைத்ததன் காரணமாகவே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அனைவராலும் மிகுந்த பாசத்துடன் மதிக்கப்படுகிறார்.
கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி
தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com