

இந்தியக் குடியரசின் தொடக்கம் இந்த நாட்டின் மக்கள் மீது அதிக நம்பிக்கை கொண்ட ஒரு செயலாகும். தகுதியான நோக்கங்களை அடைவதற்காக நாட்டின் அனைத்து திறமைகளையும் வளங்களையும் அர்ப்பணிப்பதற்கான ஒரு அடையாளமாக குடியரசு விளங்குகிறது.
ஒவ்வொரு இந்தியரும் தனது வலிமை மற்றும் திறனின் அளவிற்கு ஏற்ப நாட்டின் மரியாதையை நிலைநிறுத்தவும் பாரத அன்னையின் ஆசி உலகிற்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட குடியரசு உத்வேகம் அளிக்கும்.
நமது அரசியலமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஜனநாயகக் குடியரசு, தனிநபரின் மதிப்பானது கூட்டு விருப்பத்தில் மூழ்காமல் அதைத் தக்கவைக்கிறது.
அத்தகைய அரசியலில் எந்தவொரு மனிதனும் சட்டத்தை மீறக் கூடாது. நமது ஜனநாயக அமைப்பைக் கட்டிக்காக்கும் பொறுப்பு நமக்கு உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் நினைவில் கொள்ள வேண்டும், சட்டத்தில் ஏதேனும் தவறு நடந்தால், அதன் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.
இறுதியில் பொறுப்பேற்க வேண்டும். எனவே, படிப்பின் மூலம் மட்டுமன்றி, ஜனநாயகம் செயல்படும் அரசாங்க இயந்திரத்தின் செயல்பாடுகள் பற்றிய போதுமான பரிச்சயத்தையும் பெற வேண்டும்.
நமது தேசத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்றால் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சனைகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தேசத்தின் உண்மையான மூலதனமாக இருக்கும் குணாதிசயத்தின் வலிமை குடிமகனுக்கு இருக்க வேண்டும்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தோள் கொடுக்கும் விருப்பம் இருக்க வேண்டும். தனது கூட்டாளிகளுடன் ஒருபோதும் விலகிச் செல்லக்கூடாது, குறுக்குவழிகளை நாடக்கூடாது. தவறுகளுக்கு பலிகடாக்களைக் கண்டுபிடிக்கும் ஆசைக்கு ஒருபோதும் அடிபணியக்கூடாது.
அந்நியருக்கு எதிராக அறவழியில் போராடினோம். அந்த அறப்போர் உணர்வை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பது ஜனநாயகக் குடியரசுக்கு மிகவும் முக்கியமானதாகும். வெளியே இருந்து வந்த அந்நியருக்கு எதிராக அறப்போரில் ஈடுபட்டு சுதந்திரம் பெற்றோம். தற்போது, உள்ளுக்குள் இருக்கும் எதிரிக்கு எதிராக அறப்போரில் ஈடுபட வேண்டும். ஜனநாயகத்தில் நமது அரசியலமைப்பு நமக்கு ஓட்டுரிமையை வழங்கியுள்ளது. அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
சுதந்திரப் போரின்போது விடுதலை அடைவதற்காக நமக்குள் எழுந்த தேசபக்தி என்னும் நெருப்பு தொடர்ந்து எரிய வேண்டும். இந்தியா ஒரு நியாயமான, சமத்துவமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான அரசியலையும், இந்தியத் தாயின் லட்சக்கணக்கான மக்களுக்கு முழு வாழ்க்கையையும் கட்டமைக்க வேண்டுமானால், அந்த நெருப்பு மக்களின் மனசாட்சியில் என்றென்றும் சுடர்விட வேண்டும்.
‘தி இந்து’ தலையங்கம் (26-1-1950)