

குடும்பம், மதம், சாதி, ஊடகம், நுகர்வு கலாச்சாரம், சகஉறவுகள் (Peer groups) போன்ற கலாச்சார நிறுவனங்களால் கட்டமைக்கப்படுவதே மனம். இப்பல்முனை தாக்குதல்களை சந்திக்க கூடிய இளம் உள்ளங்களை ஐந்து காரணிகள் கொண்டு பண்படுத்தலாம்.
ஜனநாயக உணர்வூட்டுதல்
சமத்துவ வகுப்பறையில், பாடங்கள் நடத்தப்படுவதில்லை; மாறாக அரங்கேறுகின்றன. குறும்புத்தனம் நிறைந்த மாணவர் எழுப்பும், கேலியான கேள்விக்கணைகளின் போதோ, திசைதிருப்பும் கேள்விக்கணைகளின் போதோ, ஆசிரியர் ஈகோ உடைந்து ஜனநாயக வகுப்பறை சமத்துவத்தை இழக்காமல் செயல்படுகிறது. பக்குவமற்ற, சுதந்திரமற்ற வகுப்பறைகள், பற்பல ஓவியர்கள், இசை வல்லுனர்கள், மென்திறன் பொறியாளர்கள், நடிகர்கள் இவர்களைக் காவு வாங்குகிறது.
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்
கவிதை வரியையும் கால நோக்கில்ஆராய்ச்சி செய்து, காட்சியாய் அரங்கேற்றுவதன் மூலம், மாணவர்களிடம் கவனக்குவிப்பை ஏற்படுத்த முடியும். கருத்தினை ஆராய்ந்து, புரிந்து, விவாதித்து, வேண்டுவன மாற்றம் செய்து, ஓர் தெளிந்த முடிவினை அடைய ஊக்குவிக்க முடியும். அசோகர்
மரம் நட்டதை அரைநூற்றாண்டாக படித்து வரும் மாணவர்கள், அரைநாளாவது தொழிற்கல்வி கற்கலாம். இதைக் கூறும் இவ்வேளையில், கல்விக்கூடங்கள் வழிமொழிய வேண்டியது தொழிற்கல்வியைத் தானே தவிர குலக்கல்வி அல்ல என்பதனை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
பாரம்பரியத்தையும், உண்மை நிலவரங்களையும் ஒருங்கிணைத்தல்
நமது பாரம்பரியம் மட்டுமே சிறந்தது என்ற அடிப்படைவாத்தை முன்மொழியாமல் உணவு, உடை, விருந்தோம்பல், நட்பாராய்தல் போன்ற மரபுக் கூறுகளை எடுத்துரைக்கலாம். உலகெங்கும், ஒரே உடை - அதிலும் நேர்த்தியாக ஒரே அளவு என்பது எப்படி சாத்தியம் இல்லையோ, அது போலவே ஒரே கனவு - அது தரும் ஒரே அடையாளம், என்பதும் சாத்தியமில்லை.
தகவல் புரட்சி உலகில் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ள மாறுபட்ட கோணங்கள் நிச்சயம் அவசியம். கலை, இலக்கியம், வனவியல், வானவியல், கட்டுமானம், வரலாறு, தொழிற்கல்வி, வணிகவியல், சட்டம், தோட்டவியல், கணக்குப்பதிவியல், தத்துவம், என்பதையெல்லாம் மறுத்துவிட்டு மருத்துவர் அல்லது பொறியாளர் எனும் கடிவாளம் கட்டப்பட்ட வாழ்க்கை குழந்தைகளுக்கு எப்படி சரியாகும்?
சமூக உறவைப் பேணச் செய்தல்
படிப்பு, நட்பு, உணவு, உறைவிட பிரச்சினைகள் என பரந்துபட்ட பிரச்சினைகள் மாணவர்களுக்கும் உண்டு. சங்கடப்படும் சக மனதுக்கு, ஆறுதலான அணுகுமுறையே தேவை. கேட்கும் காதுகளே தேவை. விரல் பிடித்து உடன் வரும் ஆசிரியரும், முன்சென்று வழிகாட்டும் ஆசிரியரும் காதுகலைகளின் விற்பன்னர்கள்.
நுகர்வு கலாச்சாரத்திலிருந்து விடுதலை
பள்ளிச் சூழலில், கற்றல் கேட்டல் நடவடிக்கைகளுடன், விளையாடுவது, உரையாடுவது, சக வயதினர் மற்றும் ஆசிரியர்களுடன் இணக்கமாக இருப்பது போன்ற ஒருங்கிணைந்த செயல்கள் நடைபெறுவதால் மாணவர்கள் பண்படுவார்கள். ஆனால், இணைய வழியில் கற்றல் என்பதில் பாடம் மட்டுமே பிரதானம்.
இளையோர் பெரும்பாலும் பொழுதினை கழிக்க பார்க்கும் வெப் சீரிஸை அணுகுவது போலவே இந்த இணைய வழி வகுப்புகளையும் அணுகினார்கள். விளம்பரம் வந்தால் தவிர்த்தல் அல்லது இடைநிறுத்தல் செய்யும் மனோபாவம், இணைய வகுப்பில், கேள்வி கேட்கப்படும் நேரத்தில், உரையாட அழைக்கப்படும் தருணத்தில், ஒவ்வொரு மாணவரிடமும் எதிரொலித்தது.
நினைத்த நேரத்தில் வகுப்பிலிருந்து வெளியே வருவது, வெளி உலக சலிப்புகளால் வேறு வழியே இல்லாமல் மீண்டும் வகுப்பில் நுழைவது போன்ற நடத்தை பலரிடம் வெளிப்பட்டது. இந்த தவிர்த்தல் அல்லது இடைநிறுத்தல் (Skip/pause) கலாச்சாரம், கற்றலில் ஆர்வமின்மை, கவனமின்மை, அதீத உணர்வு எழுச்சி என்பன போன்ற பின்விளைவுகளை உண்டாக்கின.
வெளி உலகத் தொடர்பின்மை, கற்றல் தொடர்பான தாழ்வு மனப்பான்மை, ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் கண்டிப்பு, அதீத டிஜிட்டல் சாதன பயன்பாடு என அனைத்தும் குழந்தைமையைச் சுருங்கிப் போகச் செய்து, தன்னை சுற்றியுள்ள யார் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்தது.
தன்னம்பிக்கை தகர்ந்த நிலையில், அதீத கோபம், அடம், தூக்கமின்மை, கற்றல் குறைபாடு என ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள அடுக்குகளாக நீண்டு போன நிகழ்வோடு பள்ளி வசம் சேர்ந்தனர் நம் இணைய தலைமுறை மாணவர்கள். இவர்களுக்கு இப்போதைய தேவை பரஸ்பரம் பழகுதல், மாணவர்களை ஈகோ இன்றி ஒருங்கிணைத்தல், வகுப்பு மற்றும் பாடத்தின் மேல் நம்பிக்கையோடு கொண்ட ஈடுபாடு பெறசெய்தலாகும். இத்தகைய புரிதலோடு வகுப்பை அணுகும் ஆசிரியர், எந்த ஒரு மாணவரிடமும் நம்பிக்கையை விதைப்பார். அவரே கனவு ஆசிரியர்.
கட்டுரையாளர்: தொழில் நெறி வழிகாட்டுதல், ஆலோசனை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை,
எஸ்ஆர்வி பள்ளி, சமயபுரம், திருச்சி