Last Updated : 23 Jan, 2023 06:15 AM

 

Published : 23 Jan 2023 06:15 AM
Last Updated : 23 Jan 2023 06:15 AM

பெட்டிக்கடை, பேரங்காடி, மால்களில் கிடைக்கிறது; 50 ஆண்டுக்கு பிறகு வலம் வரும் கோலி சோடா: ரூ.20 முதல் ரூ.60 வரை விற்பனை

சென்னை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வலம் வருகிறது கோலி சோடா. பெட்டிக்கடைகள், பேரங்காடிகள், மால்களிலும் கிடைக்கிறது.

1980-களில் குளிர்பானம் என்றதும்நினைவுக்கு வருவது கோலி சோடாதான். வீட்டுக்கு விருந்தினர் வந்ததும்பெட்டிக் கடை அல்லது பலசரக்கு கடைக்கு சென்று கோலி சோடா வாங்கித் தருவார்கள். அதன் பிறகுடொரினோ, பவண்டோ போன்ற நம்நாட்டு குளிர்பானங்கள் பிரபலமானது.உள்ளூர் குளிர்பானங்கள் எத்தனை வந்தாலும் கோலி சோடா விற்பனை குறையவில்லை.

கடந்த 38 ஆண்டுகளாக கோலி சோடா தயாரித்து விற்பனை செய்து வரும் தென்காசி மாவட்டம், ராயகிரியைச் சேர்ந்த பாலமுருகன் சோடா கம்பெனி உரிமையாளர் ஆ.முருகேசன் கூறியதாவது: 1970-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே கோலி சோடா விற்பனை இருந்தது. ஆரஞ்சு, மாங்கோ, லெமன், கிரேப் (லவ்வோ கலர்), பன்னீர் சோடா (அமிர்தம்), சாதாரண சோடா (உப்பு சோடா) போன்ற பல வகைகள் விற்கப்பட்டன. அப்போது அதன் விலை 5 பைசா.

1985- களில் 20 காசுகள்.அந்தக் காலக்கட்டத்தில் தினமும் ஆயிரம் சோடா பாட்டில்கள் வரை விற்பனையானது. 1990-களில் கோகோ, பெப்ஸி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் வருகையால் கோலி சோடா பாட்டில் விற்பனை குறைந்தது. இப்போது விற்பனை கொஞ்சம் சூடுபிடித்துள்ளது. இருப்பினும் வெளிநாட்டு குளிர்பானங்களோடு போட்டி போட முடியவில்லை. தற்போது உற்பத்தி விலையைப் பொருத்து ஒரு கோலி சோடா ரூ.7 முதல் ரூ.10 விற்பனை செய்யப்படுகிறது என்றார் முருகேசன்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி சோடா விற்பனை சூடுபிடித்துள்ளது. பெட்டிக்கடைகள், பேரங்காடிகள், மால்கள், நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்கிறது. பெரும்பாலான கடைகளில் ஒரு கோலி சோடா ரூ.20-க்கு விற்கப்படுகிறது. மால்களில் ரூ.40 வரை விற்கிறார்கள். சென்னைப் புத்தகக் காட்சியிலும் ரூ.40-க்கு விற்றது. இ்ங்கு கடை போடுவதற்கான உரிமத் தொகைஅதிகம் என்பதால் கூடுதல் விலைக்கு விற்க வேண்டியதாகிவிட்டது என்கின்றனர் கோலி சோடா விற்பனையாளர்கள். நட்சத்திர ஓட்டல்களில் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் புளூபெரி, ஆரஞ்சு, மாங்கோ, லெமன், பன்னீர், பைன் ஆப்பிள், கிரீன் ஆப்பிள், ஸ்டாபெரி உள்ளிட்ட வகைகளில் கோலி சோடா விற்பனை செய்யப்படுகின்றன.

கோலி சோடா விலை வித்தியாசம் குறித்து அதன் விற்பனையாளர்களிடம் விசாரித்தபோது, “முன்பு உள்ள கண்ணாடி பாட்டில்களைவிட இப்போதுள்ள கண்ணாடி பாட்டில்களின் எடை குறைவு. முன்பைவிட இப்போது உற்பத்திச் செலவும் அதிகம். அத்துடன் கோலி சோடா விற்பனைக்காக ஒரு நிறுவனத்தை தொடங்க அதனைப் பதிவு செய்து, உரிமம் பெற்று, மின் இணைப்பு வாங்கி ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

மேலும், கோலி சோடா உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் விலையும், பணியாளர்களுக்கான சம்பளமும் மிக அதிகம். அதனால் உற்பத்தி செலவுக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பலரும் எந்தப் பதிவும் இல்லாமல் விற்கின்றனர். அவர்கள் விற்பனை செய்யும் கண்ணாடி பாட்டிலில் எந்த தகவலும் இருக்காது. இதுபோன்ற விற்பனையை தடை செய்ய, கோலி சோடா விற்பனையை அரசு முறைப்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x