

பரீட்சையில் சக மாணவனின் விடைத்தாளைப் பார்த்து எழுதி பெறும் மதிப்பெண் உன்னுடையதா? அதில் நான் போடும் மதிப்பெண் உண்மையில் உன் பெயருக்குச் சொந்தமானதா? என யோசியுங்கள் என்று எனது பள்ளி பருவத்தில் எங்கள் ஆசிரியர் கூறிய சொற்கள் பசுமரத்தாணிபோல என் மனதில் பதிந்தவை.
காப்பி அடித்து எழுதும் மாணவர்களை தட்டிக்கேட்கும் சம்பவம் ஆசிரியர்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஒரு வகையில் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களே குழந்தைகளின் இந்த தவறான செயலுக்கு காரணம் என நினைக்க வைக்கிறது. ஆம்! அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தை தன் குழந்தை மனதில் புகுத்தி விடுகின்றனர் பெற்றோர்.
வீடு திரும்பும் குழந்தைகளிடம் நீ என்ன இன்று கற்றுக் கொண்டு வந்துள்ளாய் என்று கேட்பவர்களை விட, எவ்வளவு மதிப்பெண் பெற்று வந்துள்ளாய் என கேட்கும் பெற்றோர்களே அதிகம். இதனால் குழந்தைகளும் மதிப்பெண் கிடைத்தால்போதும் என்று அதை தவறான வழியில் பெற முயல்கின்றனர்.
அதேபோல் மாணவர்கள் காப்பியடித்து எழுதுவதை நண்பனுக்கு உதவும் ஒரு செயல் என நினைக்கின்றனர். நண்பன் மற்றும் உதவி என்பதன் அர்த்தம் தெரியாமல் இக்காரியத்தை செய்வது மிகவும் வேதனைக்குரியது. உண்மையான நட்பு யாதெனில் நண்பனை படிக்க வைப்பதுதானே தவிர பார்த்து எழுத உதவுவதல்ல என்று குழந்தைகளிடம் புரிய வைத்தாலே போதும்.
மாணவர்கள் மனதில் புகுத்த வேண்டியது: தன்னுடைய ஆசிரியரிடம் நற்பெயர் வாங்கும் ஆசையும், தன்னை பற்றிய நல்ல அபிப்பிராயம் ஆசிரியர் மனதில் ஏற்பட வேண்டும் என்கிற விருப்பமும் ஒவ்வொரு குழந்தையிடமும் காணப்படுவது இயல்பு. இதுக்கு ஆசைப்பட்டுத்தான் பல காரியங்களில் குழந்தைகள் ஈடுபடுகிறார்கள். மதிப்பெண்களை வைத்து அல்ல நற்குணங்கள் மற்றும் நற்செயல்கள் வைத்தே தான் ஆசிரியரால் மதிப்பிடப்படுவோம் என்கிற நிலை உருவெடுத்தால் இதற்கு தீர்வு கிட்டும். இதன் மூலம் மாணவர்களிடம் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.
ஜீரோவோ, நூறோ எதுவானாலும் அது உன்னுடையதாக இருக்க வேண்டும். அடுத்தவரைப் பார்த்து எழுதி நூறு மதிப்பெண் பெறுவதால் உன் வாழ்க்கையில் நீ ஜீரோ ஆகிறாய். வாழ்க்கையோ பரீட்சையோ, எதுவானாலும் உன் விடைதான் உன்னை உயர்த்தும் என்பதை மாணவர்களிடம் ஆசிரியர்களாகிய நாம் உரக்கச் சொல்வோம், மாணவச் செல்வங்கள் வெல்ல கரம் கொடுப்போம்.
கட்டுரையாளர்: கணிதத் துறை ஆசிரியர், எஸ்ஆர்வி சீனியர் செகண்டரி பப்ளிக் ஸ்கூல், திருச்சிராப்பள்ளி.