படி... படி என்கிற வார்த்தை ஏற்படுத்தும் தாக்கம்

படி... படி என்கிற வார்த்தை ஏற்படுத்தும் தாக்கம்
Updated on
2 min read

இன்றைய குழந்தைகளுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை எதுவென்று கேட்டால், அது 'படி' என்ற அந்த ஒற்றைச் சொல்லாகத்தான் இருக்க முடியும். ஒரு நாளில் குழந்தையின் காதில் ஓராயிரம் முறை ஓதப்படும் சொல் இதுவாகத்தான் இருக்க முடியும். காலை ஐந்து மணிக்கு ஒரு பதின்ம வயது குழந்தையின் காதில் ஓதப்படும் இந்த சொல் தொடர்ச்சியாக இரவு அந்த குழந்தை தூங்கச் செல்லும் வரையில், பலராலும் பல விதங்களில் ஓதப்படுகிறது. கற்றல் மிக மிக அவசியமான ஒன்று தான், ஆனால் மதிப்பெண் சார்ந்த படித்தல் அவசியமா என்ற ஆய்வு மிக அவசியமாகிறது.

குழந்தையின் மீதான மொத்த மதிப்பீட்டையும் இந்த சமூகம் படிப்பை கொண்டே முடிவு செய்கிறது என்பதுதான் பிரச்சினை. நல்ல மதிப்பெண் எடுக்கும் பையனோ பொண்ணோ நல்ல குழந்தையாக இருப்பார்கள் என்ற மூடநம்பிக்கை சமூகத்தில் நிலவுகிறது. இதுவும் அந்தக் குழந்தையின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், அந்த குழந்தையை தொடர்ந்து படிக்க வலியுறுத்துவதன் காரணமாகிறது.

நடத்தையில் மாற்றம்: இதனால் குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதை கண்கூடாக காண முடிகிறது. கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அவர்களது நடத்தை, போக்கு அத்தனையும் பதின்ம வயதில் மாற்றம் அடைகிறது. பொதுவாகவே பதின்ம வயதில் குழந்தைகளுக்கு தோற்றத்திலும் நடத்தையிலும் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் இந்த 'படி' என்ற சொல்லும், மதிப்பெண்களை துரத்த வேண்டிய கட்டாயமும், நடத்தையிலும் போக்கிலும் ஏற்படும் மாற்றத்தில் கடும் ஆக்ரோஷமான ஒரு நிலையை (Aggressive behaviour) ஏற்படுத்துகிறது.

பெற்றோர்களுக்கு இந்த போட்டி நிறைந்த காலத்தில் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது ஏற்படும் கடும் அச்சமும், குழந்தைகளின் வாழ்வில் மதிப்பெண்கள் ஏற்படுத்தப் போகும் தாக்கம் குறித்த பயமும், தொடர்ந்து குழந்தைகளை படிக்கச் சொல்லி வலியுறுத்த வைக்கிறது. கல்வி மற்றும் தேர்வு முறையில் உடனடி மாற்றங்கள் செய்ய முடியாது.

வேலை வாய்ப்பு: வேலை வாய்ப்பில் அரசு, தனியார் பெரு நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். முறைசாரா துறைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து ஊதியம் மற்றும் பணிச்சூழல் வழக்கங்களிலும் அவைகளை வரைமுறைக்கு உட்படுத்தி முறைசார் நிறுவனங்களாக வரையறுக்க வேண்டும். இதெல்லாம் தான் போட்டி தேர்வுகளின் மீதான மோகத்தை குறைக்க உதவும்.

தனியார் நிறுவனங்களில் மதிப்பெண்கள் வெறும் அறிமுக அட்டையாக மட்டுமே பயன்படும், கற்றல் திறன்களுக்கே அங்கு அதிக மதிப்பு வழங்கப்படுகிறது.

தொழில்முனைப்பு, வேலை வாய்ப்பு என இரண்டிலும் முறைசார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தால் அரசு வேலை வாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகள் மீதான பார்வையை சிறிதளவு குறைக்க உதவும். குறிப்பாக அரசு பணிகள் மீதான மோகமே மதிப்பெண் மற்றும் போட்டித்தேர்வுகள் மீதான மோகத்திற்கான முக்கிய காரணமாக அமைகிறது.

கட்டுரையாளர்

ஆசிரியர்

வணிகவியல் துறை

எஸ்.ஆர்.வி.மேல்நிலைப்பள்ளி

சமயபுரம்

திருச்சிராப்பள்ளி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in