

கட்டுப்பாடுகளுக்குள் இருந்து கொண்டு ஒன்றைக் கற்றுத் தேறிவிடலாம் என்னும் கனவு சாத்தியமில்லை. இலக்கை நோக்கிய பயணத்தில் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. ஆங்கிலேயர் ஆட்சியில் நம் உணர்வுகள் மறுக்கப்பட்டது போல, இன்றைய சமுதாயத்திலும் மாணவர்களின் உணர்வுகள் மறுக்கப்படுவது கண்கூடு. மாணவர்களின் உணர்வுகளை உணரும் மனங்கள் வெகுவாய்க் குறைந்து போய்விட்டன. பெற்றோரின் கனவுகள் மாணவர்களின் சுதந்திர உணர்வை குலைத்துவிடுகின்றன. இது பெற்றோர் மாணவர் உறவில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது.
சமீபத்தில் வகுப்பறையில் திருவிழா குறித்துப் பேசியபோது ஒரு மாணவன், "திருவிழான்னா என்ன சார்?" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. சமுதாய விழாக்கள் பற்றிய அறிமுகமோ, அனுபவமோ இல்லாத தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் இதில் வெகுவாய் பாதிக்கப்படுகின்றனர். எந்தத் திருவிழாக்களும், குடும்ப விழாக்களும் இவர்களுக்கு இல்லை. பெற்றோரும் தங்கள் வீடுகளில் விழாக்களுக்குப் போக திட்டமிடும்போது, தங்கள் வீடுகளில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் குழந்தைகளைப் புறக்கணிக்கின்றனர்.
உணர்வு கலந்த அத்தனை விழாக்களையும் புறக்கணித்துவிட்டு, மாணவனிடம் அன்பு இல்லை, மனிதநேயமில்லை, மாண்பு இல்லை என்று கூறுவது சரியான நடைமுறையா? வீடுகளில் இருந்து தினசரி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கே இந்த நிலை என்றால், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை.
மாணவர்களின் உணர்வுகள் ஏற்றுக் கொள்ளப்படாத இடங்களில் இருந்து கொண்டு, அவர்களை சாதிக்கக் சொன்னால் எப்படி முடியும்? திறன்பேசிகளிலும், கணினிகளிலும், தொலைக்காட்சிகளிலும், மூழ்கிப் பழகிவிட்டு திடீரென்று கற்றலில் ஈடுபட மனம் ஒப்புக் கொள்ளாமல் அழுத்தத்திற்கு ஆட்பட்டுவிடுகிறது. எந்த ஒரு புது செயலும் 21 நாளைக்குப் பின்தான் பழக்கமாக மூளையால் ஏற்க இயலும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து.
விருப்பத்தை திணிப்பது சரியா? - வயது ஒரு பக்கம், உலக ஆசைகள் மறுபக்கம், சமூக ஊடகங்கள் மற்றொரு பக்கம், அறிவியல் வசதிகள்இன்னொரு பக்கம் என பல பக்கங்களில் அவர்கள் இழுக்கப்படும்போது,மாணவர்கள் மதிப்பெண்களால் மட்டுமே இழுக்கப்பட வேண்டும் என்றுநிர்ப்பந்திப்பது எப்படி சரியாகும்? ஒருவர் விருப்பத்தை மற்றவர் மீதுதிணிப்பதும் வன்முறைதானே?
கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம்கவனச்சிதறலை சரி செய்து விட ஒருபோதும் இயலாது. சுதந்திரமான கல்விக்கு மனதையும், சிந்தனையையும் பழக்குவிக்கும் நடைமுறையே தேவை. திணிப்பதில் பல்வேறு உத்திகளைத் தேடுகிறோமே ஒழிய, கற்பித்தல் முறையில் மாற்றம் காண முயற்சிப்பதில்லை. ‘
நான் உன்னிடம் அன்பாக தானே பேசுகிறேன்', ‘உனக்காகத் தானே சொல்கிறேன்' என்று நம் விருப்பத்திற்குத்தான் கட்டுப்படுத்த முனைகிறோம். திணித்தலை ஆக்ரோஷமாய் செய்தாலும், அன்புடன் பொறுமையாய் செய்தாலும் திணித்தல் திணித்தல்தானே.
மாணவரின் மதிப்பெண் அடிப்படையில் அவருக்கென்று இதுதான் சரிஎன்று சம்மதிக்க வைக்கும் முயற்சியில்தான் ஈடுபடுகிறோம். இயல்பாய், சுதந்திர உணர்வுடன் கற்கும் காலம் விளைவது எப்போது? துறைகளை அறிமுகப்படுத்தி யாருடைய திணிப்பும் இல்லாமல் மாணவர் விருப்பத்திற்கு கற்க வைப்பதை எப்போது செயல்படுத்தப் போகிறோம்?
கட்டுரையாளர்: தமிழாசிரியர், எஸ்.ஆர்.வி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.