Published : 04 Jan 2023 06:15 AM
Last Updated : 04 Jan 2023 06:15 AM

சிறார் ஆன்லைன் அடிமையாக பெற்றோர்தான் காரணம்

பெ.ரீனா எஸ்தர்

குழந்தைகளுக்கு அதிகளவில் சுதந்திரம் கொடுத்து கெடுக்கும் பெற்றோர் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தனது குழந்தைக்கான வாழ்க்கையை தானே வாழ்ந்து குழந்தையை சுயமாக சிந்திக்க விடாமல் அவர்கள் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை தாங்களே நிர்ணயிக்கும் பெற்றோர்களும் உள்ளனர்.

பெற்றோர்களுக்கு தேவை மதிப்பெண்கள் மட்டும் தான். பெற்றோர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் சிறந்த மதிப்பெண்களை பெறும் மாணவர்களை உருவாக்குகிறார்களே தவிர சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் தோல்வி அடைகிறார்கள்.

மதிப்பெண்களே பிரதானம்: ஒருபுறம் பெற்றோர்கள் நிர்ணயித்த மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற அழுத்தத்திற்கும், மறுபுறம் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதற்காக கொடுக்கும் அழுத்தத்திற்கும், இடையில் சிக்கி தானும் சுயமாக சிந்திக்க முடியாமல், பெற்றோர் நிர்ணயிக்கும் மதிப்பெண்ணுக்காக, அதை அடைய தவறும் நிலையில் ஏற்படும் ஒருவித மன அழுத்தத்துடன் கல்வியை மேற்கொள்ளும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலை ஆரம்ப பள்ளிகளில் இருந்தே தொடர்வதால், தனது விருப்பம், பலம், பலவீனம், சவால்கள், எது என்றே தெரிந்துகொள்ள முடியாமல் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன்னால் சுயமாக முடிவெடுக்க முடியாமலும், தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தான் எடுக்க வேண்டிய தீர்வை தன்னை சுற்றி இருக்கும் தன் வயதுடைய நண்பரோ அல்லது தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் விட்டு விடுகிறான். அவர்கள் வழங்கும் தீர்வுகளில் எது தனக்கு சாதகமாக உள்ளதோ, அதையே அவன் தேர்வு செய்கிறான்.

ஆன்லைன் அடிமைகள்: கரோனா பெருந்தொற்று ஊரடங்கின்போது, வீட்டிற்குள் முடங்கிய குழந்தைகள் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி, மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதற்கு இதுவே ஒரு முக்கிய காரணம். மாணவர்கள் தங்களுடைய வாசிப்பு திறனை (பள்ளி புத்தகங்களை தாண்டி) மேம்படுத்த பெற்றோர்கள் உறுதுணையாக இருந்திருந்தால், தனிமையை போக்குவதற்கு ஆன்லைன் விளையாட்டுகளை தேர்வு செய்திருக்கமாட்டார்கள்.

குழந்தைகளின் சிறுவயது முதல் பெற்றோர்கள் நிர்ணயித்து வைத்திருக்கும் மதிப்பெண்கள் என்ற இலக்கை நோக்கியே கடிவாளமிடப்பட்ட குதிரைகள் போலஓடிக் கொண்டிருப்பதால், அவர்களால் பாடப்புத்த கங்களை தாண்டி கலை, இலக்கியம், ஓவியம், இசை, சினிமா, விளையாட்டுகள் ஆகியவற்றில் நாட்டம் இல்லாமலேயே போய்விட்டது.

வாழ்க்கைத் திறன் மேம்பட... ஒரு மாணவனை நல்லொழுக்கம் சார்ந்து உருவாக்க வேண்டிய இடத்தில் வீடும், பள்ளியும், சமூகமும் உள்ளது. ஒரு சமூகத்தில் சக மனிதர்களுடன் பழகி வாழ்க்கை திறன்களை மேம்படுத்த அனுமதியாத பெற்றோர்களால் ஒருநாளும் தன்னுடைய குழந்தை சமுதாயத்தில் நல்ல நிலையை அடைந்துவிட்டான் என்று பெருமைபட்டு கொள்ளவே முடியாது.

நாம் ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் பெறும் அனுபவங்களே சிறந்த கற்றலாக இருக்கிறது. இந்த நடைமுறைக் கற்றல் ஒருவர் தன்னை சுயபரிசோதனை செய்து,தன்னைத்தான் வாழ்வின் ஆகச்சிறந்த அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சிக்கு முன்னோக்கிச் செல்ல உறுதுணையாக உள்ளது.

இவ்வாறு பள்ளியில் செயல்படுத்தப்படும் கல்வித்திட்டம் ஒரு மாணவர் தான் அறிவுசார் வளர்ச்சியில் மேம்பட உதவும் ஒரு கற்றல் கருவியாக கருதப்பட்டாலும் பெரும்பாலான பெற்றோர்களின் புரிதலில் பள்ளிக் கல்வி, வாழ்க்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிகோலும் ஆயுதமாகவே பார்க்கப்படுவது மிகுந்த வேதனைக்குரியது.

- கட்டுரையாளர் முதுகலை உயிரியல் ஆசிரியர் எஸ்.ஆர்.வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி பிராட்டியூர், திருச்சி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x